தமிழக அரசுடன் அதிகார மோதல் இல்லை: ஆளுநர் மாளிகை விளக்கம்

ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் தவறானவை.
தமிழக அரசுடன் அதிகார மோதல் இல்லை: ஆளுநர் மாளிகை விளக்கம்
ANI
1 min read

தமிழக அரசுடன் அதிகார மோதலுக்காக பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு நடத்தப்படவில்லை என்று தமிழக ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது.

வரும் ஏப்ரல் 25, 26 ஆகிய தேதிகளில் நீலகிரி மாவட்டம் உதகையில், தமிழக அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்றும் வருடாந்திர மாநாடு நடைபெறும் என்று ஆளுநர் மாளிகை சார்பில் நேற்று (ஏப்.22) அறிவிக்கப்பட்டது.

சிறப்பு விருந்தினராக இதில் பங்கேற்று குடியரசுத் துணை தலைவர் ஜகதீப் தன்கர் மாநாட்டைத் தொடங்கி வைப்பார் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், துணை வேந்தர்கள் மாநாடு குறித்து, தமிழக ஆளுநர் மாளிகை இன்று (ஏப்.23) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது,

`மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் வருடாந்திர துணைவேந்தர்கள் மாநாட்டை முன்வைத்து, ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இடையே அதிகார மோதல் நிலவுவதாக சில ஊடகங்களில் தவறான செய்திகள் வெளியாகின்றன. இந்த செய்திகள் முற்றிலும் தவறானவை.

உயர்கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்கும் வருடாந்திர மாநாடு 2022-ல் இருந்து ஒவ்வொரு ஆண்டு ஏப்ரலிலும் தமிழக ஆளுநரால் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இதற்கான முன்னேற்பாடுகள் பல மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிடும்.

இந்த வருடமும் மாநாட்டிற்கான பணிகள் ஜனவரியிலேயே தொடங்கிவிட்டன. இந்த மாநாட்டை உபயோகமானதாக நடத்த, பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன.

கற்பித்தல், கற்றல், புத்தாக்கம் ஆகியவற்றில் சிறந்து விளங்குவதை உறுதிசெய்யும் நோக்கம் கொண்ட இந்த மாநாட்டை சமீபத்திய நீதிமன்றத் தீர்ப்புடன் தவறாக இணைத்து, ராஜ்பவனுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான அதிகாரப் போராட்டமாக சித்தரிக்க சில ஊடக செய்திகள் முயற்சிப்பது துரதிர்ஷ்டவசமானது. இவை அவதூறானவை மற்றும் உண்மைக்கு அப்பாற்பட்டவை’ என்றார்.

logo
Kizhakku News
kizhakkunews.in