தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்திய தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவிப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தந்தை பெரியாரின் 146-வது பிறந்தநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கிய பிறகு அறிக்கை வாயிலாகவே வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தார் அதன் தலைவர் விஜய். இந்த நிலையில், பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு முதன்முறையாக சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் சிலைக்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினார். இது பல்வேறு சமிக்ஞையைக் கொடுப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வந்தார்கள்.
இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் துணை முதல்வர் பதவி குறித்தும் பெரியார் சிலைக்கு விஜய் மாலை அணிவித்தது குறித்தும் கேட்கப்பட்டன.
"துணை முதல்வர் பதவி குறித்து முதல்வர் முடிவெடுப்பார். தொண்டர்கள் அவர்களுடைய விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்கள். பழனிமாணிக்கம் நேற்று அவருடைய விருப்பத்தைத் தெரிவித்துள்ளார். எதுவாக இருந்தாலும், என்றும் அனைத்து அமைச்சர்களும் முதல்வருக்குத் துணையாக இருப்போம். இது முழுக்க முழுக்க முதல்வரின் தனிப்பட்ட முடிவு.
பெரியார் சிலைக்கு விஜய் நேரில் சென்று மரியாதை செலுத்தியது நல்ல விஷயம். யாராக இருந்தாலும் தமிழ்நாட்டில் பெரியாரைத் தாண்டி, பெரியாரை மீறி, பெரியாரைத் தொடாமல் அரசியல் செய்ய முடியாது. நண்பர் விஜய்-க்கு என் வாழ்த்துகள்" என்றார் உதயநிதி ஸ்டாலின்.