ஈசிஆர் விவகாரத்தில் அரசியல் தொடர்பு இல்லை: காவல் துணை ஆணையர் விளக்கம்

இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்டுள்ள குற்றவாளிகளில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
ஈசிஆர் விவகாரத்தில் அரசியல் தொடர்பு இல்லை: காவல் துணை ஆணையர் விளக்கம்
1 min read

ஈசிஆர் சாலையில் பெண்கள் காரில் துரத்தப்பட்ட விவகாரத்தில் அரசியல் தொடர்பு இல்லை எனவும், சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்துவதை தவிர்க்கவே குறிப்பிட்ட கட்சிக்கொடி காரில் பொருத்தப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளார் பள்ளிக்கரணை காவல் துணை ஆணையர் கார்த்திகேயன்.

கடந்த ஜன.24-ல் சென்னையின் ஈசிஆர் சாலையில் நள்ளிரவு நேரத்தில் பெண்கள் சிலர் குடும்பமாக காரில் சென்றபோது அந்தக் காரை வழிமறித்து, திமுக கொடி பொருத்திய சஃபாரி காரில் இருந்த இளைஞர்கள் சிலர் துரத்தியுள்ளனர். இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

காரில் திமுக கொடி பொருத்தியிருந்ததை முன்வைத்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும், பாஜக தலைவர் அண்ணாமலையும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்தார்கள். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இன்று (ஜன.31) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் காவல் துணை ஆணையர் கார்த்திகேயன் கூறியதாவது,

`ஈசிஆர் சம்பவம் குறித்து புலன் விசாரணை நடைபெற்று வருகிறது, எனவே அது குறித்து விரிவாகப் பேச முடியாது. இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்டுள்ள குற்றவாளிகளில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். துரத்தப்பட்ட பெண்களின் கார் அவர்களை துரத்திய இளைஞர்கள் கார்களை இடிக்கவில்லை.

பெண்களை துரத்திய இளைஞர்கள் யாரும் குடிபோதையில் இல்லை. சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு வாகனத்தில் கட்சிக்கொடி பொருத்தப்பட்டிருந்தது. சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்துவதை தவிர்க்கவே அந்த கட்சிக்கொடி காரில் பொருத்தப்பட்டுள்ளது. கார் உரிமையாளருக்கு எந்த ஒரு அரசியல் கட்சியுடனும் தொடர்பு இல்லை.

மேலும், 7 குற்றவாளிகளில் 6 பேர் கல்லூரி மாணவர்கள், ஒருவர் வேலை பார்த்து வருகிறார். இதில் சந்துரு என்பவர் மீது ஏற்கனவே ஆள் கடத்தல் மற்றும் மோசடி என 2 குற்ற வழக்குகள் உள்ளன. இது 24-ம் தேதி இரவில் நடைபெற்ற சம்பவம். புகார்தாரர் 26-ம் தேதி காலையில் புகாரளித்தவுடன், உடனடியாக அது பதிவுசெய்யப்பட்டு, தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்த விவகாரம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் மற்றும் சுங்கச் சாவடிகளில் ஆய்வு செய்யப்பட்டன. மகேந்திரா தார் மற்றும் டாடா சஃபாரி என இரண்டு கார்கள் குற்றவாளிகளால் உபயோகப்படுத்தப்பட்டன. கொடி கட்டியிருந்த சஃபாரி கார் அனீஷ் என்பவருக்கு சொந்தமானது.

அதை கடந்த 6 மாதங்களாக சந்துரு பயன்படுத்தி வருகிறார். அந்த இரு கார்களும் காவல்துறை கட்டுப்பாட்டில் தற்போது உள்ளது. குற்றச்செயலில் ஈடுபட்ட யாருக்கும் அரசியல் தொடர்பு இல்லை’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in