
எங்களை ஆளாக்கிய தலைவர்களின் படங்கள் விழாவில் இல்லை என்றும், விழாவில் கலந்துகொள்ளவில்லையே தவிர அதைப் புறக்கணிக்கவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்காதது குறித்து விளக்கமளித்துள்ளார் அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன்.
அத்திக்கடவு-அவிநாசி திட்டம் நிறைவேற காரணமாக இருந்த முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு அத்திக்கடவு-அவிநாசி திட்டக் கூட்டமைப்பு சார்பில் கோவை மாவட்டம் அன்னூர் கஞ்சப்பள்ளியில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கலந்துகொள்ளவில்லை.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று (பிப்.10) காலை கலந்து கொண்டார் செங்கோட்டையன்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், எடப்பாடி பழனிசாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்காதாது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது,
`அத்திக்கடவு-அவிநாசி திட்டக் கூட்டமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் எங்களை உருவாக்க ஆளாக்கிய தலைவர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவப் படங்கள் இல்லை. விழா தொடர்பாக தட்டிகள், டிஜிட்டல் போர்டுகள் வைக்கப்போதுதான் இது எனது கவனத்திற்கு வந்தது.
இது தொடர்பாக விழா குழுவினரிடம் வேண்டுகோள் வைத்தேன். அதே நேரத்தில் இந்தத் திட்டத்தைக் கொண்டு வருவதற்கு 2011-ல் ரூ. 3.72 கோடி நிதியை அன்றைய முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி. ராமலிங்கம், இந்த திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்கான உத்தரவை வழங்கினார். நான் அந்த விழாவிற்கு செல்லவில்லையே தவிர அதைப் புறக்கணிக்கவில்லை’ என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்த அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான டி. ஜெயக்குமார்,
`அத்திக்கடவு அவிநாசி திட்டம் நிறைவேற்றியதற்கு, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர்தான் காரணம். பாராட்டு விழாவில் அரசியல் கலக்கக்கூடாது என்பதால் அவர்களின் படங்கள் வைக்கப்படவில்லை. இந்த திட்டத்திற்காகப் போராடிய விவசாயிகள் சங்கத்தினர் பாராட்டு விழாவை நடத்தினார்கள்.
அனைத்துக் கட்சி விவசாயிகளும் பங்கேற்றதால் அரசியல் கலக்கக்கூடாது என்பதுதான் நோக்கமாக இருந்தது. அதிமுக சார்பில் பாராட்டு விழா நடந்தால் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் வைக்கப்பட்டிருக்கும்’ என்றார்.