மதுரையில் டங்ஸ்டன் கனிமத்துக்கு ஆய்வுடன் இணைந்த சுரங்கம் அமைக்க எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது.
"ஒன்றிய அரசால் கடந்த ஜூன் 24-ல் மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், நாயக்கர்பட்டி கிராமத்தில் டங்ஸ்டன் கனிமத்திற்கு ஆய்வுடன் இணைந்த சுரங்கக் குத்தகை உரிமம் வழங்க ஏல அறிவிப்பு செய்யப்பட்டு, கடந்த 7 அன்று இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்தினைத் தகுதியான நிறுவனமாக சுரங்க அமைச்சகத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, அந்நிறுவனத்திடமிருந்து தமிழக அரசு எந்த விண்ணப்பமும் பெறவில்லை எனவும், அனுமதி ஏதும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது" என்று தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது.
ஹிந்துஸ்தான் ஸிங்க் நிறுவனம் வேதாந்தா நிறுவனத்துக்குச் சொந்தமானது.
கடந்த நவம்பர் 7 அன்று ஹிந்துஸ்தான் ஸிங்க் நிறுவனத்துக்கு மத்திய அரசு சுரங்கக் குத்தகை உரிமம் வழங்கியதிலிருந்து இதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். மதுரை ஆட்சியரிடம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சார்பாகப் புகார் மனு கொடுக்கப்பட்டது.
பல்வேறு கட்சித் தலைவர்கள் தமிழ்நாடு அரசு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி வந்தார்கள். இந்த நிலையில், எந்தவொரு அனுமதியும் வழங்கவில்லை என தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது.