
டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து செயல்படுவதில் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எள்ளளவும் விருப்பமில்லை என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகளின் மகளிரணி சார்பில் கள்ளக்குறிச்சியில் அக்டோபர் 2 அன்று மது ஒழிப்பு மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க அதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்தது அரசியல் சூழலில் பேசுபொருளானது. இந்த மாநாட்டைப் பொறுத்தவரை எந்தத் தவறும் இல்லை என அமைச்சர் முத்துசாமி விளக்கமளித்துள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
"முதல்வர் ஒரே நாளில் உத்தரவு பிறப்பித்து மதுக்கடைகளை மூடலாம். டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பதில் அவருக்கு எள்ளளவும் விருப்பமில்லை. என்றைக்காவது ஒரு நாள் மதுக்கடைகளை மூட வேண்டும் என்பதுதான் அவருடைய எண்ணம். ஆனால், உடனடியாக இதைச் செய்தால் என்ன நிலைமை வெளியில் ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. எனவே, அப்படிப்பட்ட ஒரு கடுமையான சூழ்நிலையை மிக நிதானமாக அணுகி கொண்டுபோக வேண்டும் என்பதுதான் அரசினுடைய நோக்கமாகவும் முதல்வரின் நோக்கமாகவும் இருக்கிறது. நிச்சயமாக ஒரு காலகட்டத்தில் மக்களை மதுப் பழக்கத்திலிருந்து வெளியே கொண்டுவந்த பிறகு, இதையெல்லாம் குறைத்துக்கொண்டே வருகிற நடவடிக்கை எடுக்கப்படும்.
இங்குள்ள சூழலைப் பொறுத்துதான் முடிவெடுக்கப்படும். விசிகவைப் பொறுத்தவரை, கொள்கை ரீதியான ஒரு முடிவுக்காக மாநாட்டை நடத்துகிறார்கள். அதில் எந்தத் தவறையும் நாம் சொல்ல முடியாது. அவர்கள் அரசாங்கத்தையும் முதல்வரையும் எதிர்த்து மாநாட்டை நடத்துகிறார்களா என்றால் இல்லை. அவர்கள் ஒரு கொள்கையாக இதை மக்களிடம் எடுத்துச் செல்கிறார்கள்.
ஒரு பொது நிகழ்வில் யார் வேண்டுமானாலும் வந்து கலந்துகொள்ளலாம் என பொதுவான அழைப்பைதான் விடுதலைச் சிறுத்தைகள் விடுத்துள்ளார்கள்" என்றார் அமைச்சர் முத்துசாமி.