வீட்டு மின் இணைப்புகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை: அமைச்சர் சிவசங்கர்

"100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் தொடர்ந்து வழங்கப்படும்."
கோப்புப்படம்
கோப்புப்படம்
1 min read

வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை என போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்தில் நிலவும் பணவீக்கத்தை அளவிடும் வருடாந்திர நுகர்வோர் விலைக் குறியீட்டை (Consumer Price Index) அடிப்படையாகக் கொண்டு, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதற்கான விதிகளைக் கொண்ட ஆணை கடந்த 2022-ல் வெளியிடப்பட்டது. இதன்படி, 6 சதவீதம் அல்லது ஏப்ரல் மாத பணவீக்க விகிதம் ஆகிய இரண்டில், எது குறைவோக உள்ளதோ அந்த அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும்.

அந்த வகையில், நுகர்வோர் விலைக் குறியீட்டை முன்வைத்து கடந்த 2023 ஜூலையில் 2.18 சதவீதமும், 2024 ஜூலையில் 4.83 சதவீதமும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அப்போது, வீடுகளுக்கான மின் கட்டண உயர்வை தமிழக அரசு ஏற்றது.

இதனால், அவ்வப்போது மின் கட்டண உயர்வு குறித்து வதந்திகள் வரும். தமிழ்நாடு அரசு சார்பில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்படும். இந்நிலையில், ஜூலை வரவுள்ளதால் தமிழ்நாட்டில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை என மின்சாரத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

"சமூக வலைதளங்களிலும், சில செய்தி ஊடகங்களிலும் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் பரவி வந்த நிலையில், அதுதொடர்பாக ஏற்கெனவே மே 20 அன்று வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை என விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

எனினும், தற்போது மீண்டும் மின் கட்டணம் குறித்த வதந்திகள் தொடர்ந்து பரவி வருவதால், இதுகுறித்து மீண்டும் அரசின் சார்பில் தெளிவுபடுத்தப்படுகிறது.

தற்சமயம், மின் கட்டண உயர்வு குறித்து எவ்வித ஆணையும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் வெளியிடப்படவில்லை.

தமிழ்நாடு முதல்வரின் வழிகாட்டுதலின்படி, ஒழுங்குமுறை ஆணையம் மின்கட்டணம் தொடர்பாக ஏதேனும் ஆணை வழங்கினாலும், அதனை நடைமுறைப்படுத்தும்போது வீட்டு மின் நுகர்வோர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம், எந்தவொரு மின் கட்டண உயர்வும் இருக்காது எனவும், தற்போது வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் தொடர்ந்து வழங்கப்படும். எனவே, மின் கட்டண உயர்வு குறித்த தேவையற்ற வதந்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in