முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஓ. பன்னீர்செல்வம், திமுகவுடன் கூட்டணி குறித்த கேள்விக்கு எதுவும் நடக்கலாம் எனப் பதிலளித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் கூறியதாவது:
"முதல்வர் மு.க. ஸ்டாலின் சிறிது நாள்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து வந்துள்ளார். அவருடை உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக மரியாதை நிமித்தமாகவே இன்று சந்தித்தேன். அதோடு கலைஞரோடு மூத்த குமாரர் மு.க. முத்து அவர்களுடைய மறைவு குறித்தும் விசாரித்தேன்.
அரசியல் நிமித்தமாக எவ்விதப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. மரியாதை நிமித்தமாக அவருடைய உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக மட்டுமே இந்தச் சந்திப்பு நடைபெற்றது" என்றார்.
எதிர்காலத்தில் திமுகவுடன் கூட்டணி வைக்கக்கூடிய வாய்ப்பு உள்ளதா? அல்லது ஜெயலலிதாவின் முடிவின்படி தீயசக்தி என்று தான் பார்க்கிறீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார்கள்.
இதற்கு, "அரசியலில் நண்பர்களும் இல்லை, எதிரிகளும் இல்லை என்ற நிலைதான் கடந்த கால வரலாறு. எதிர்காலத்தில் தேர்தல் நெருங்கும்போது எதுவும் நடக்கலாம்" என்று ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.
மேலும், "கூட்டணிக்கான சந்திப்பு என்பது உங்களுடைய ஊகம். அரசியலில் எதிரிகள் யாரும் இல்லை. எல்லோரும் எல்லோருடனும் கூட்டணி அமைத்துள்ளார்கள், தேர்தலில் நின்றிருக்கிறார்கள், வெற்றி பெற்றுள்ளார்கள், தோல்வி கண்டுள்ளார்கள். நடைமுறையில் ஜனநாயகத்தில் இது நடந்துதானே இருக்கிறது.
பாஜக தலைவர்கள் யாரும் என்னிடம் பேச முற்படவில்லை. அரசியலில் எனக்கென்று ஒரு சுயமரியாதை இருக்கிறது. நான் ஜெயலலிதாவுடன் 25 ஆண்டு காலம் நேரடிப் பார்வையில் அரசியல் ரீதியாகவும் கட்சி ரீதியாகவும் பணியாற்றியிருக்கிறேன். அனைத்தும் எனக்குத் தெரியும்.
இன்றைய கால சூழ்நிலையில் எனக்கு ஒரு வருத்தம் உள்ளது. மக்களவையில் சமக்ர சிக்ஷா குறித்து கட்சி கேள்வியை எழுப்பும்போது, மும்மொழிக் கொள்கையை தமிழக அரசு ஏற்கவில்லை, அதனால் தான் அந்த நிதியை நிறுத்தி வைத்திருக்கிறோம் என்ற சொல்லும் சூழல் இன்றைய கல்வி அமைச்சருக்கு இருக்கிறது. ஜனநாயக நாட்டில் இது ஏற்புடையது அல்ல என்பது என் கருத்து.
இன்று இருக்கும் கட்சிகளில் மத்திய அரசாக இருந்தாலும் மாநில அரசாக இருந்தாலும் ஜனநாயகக் கடமைகளை செய்யத் தவறும் அத்தனையையும் தினந்தோறும் அறிக்கை வாயிலாக வெளியிட்டு வருகிறேன். மக்களைப் பாதிக்கக்கூடிய விஷயங்கள் எதுவாக இருந்தாலும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன். இதுதான் இன்றைய நிலைமை.
பாஜகவும் அதிமுகவும் தற்போது ஒன்று சேர்ந்துள்ளார்கள். வாழ்த்துகள்" என்றார் ஓ. பன்னீர்செல்வம்.
விஜயுடனான கூட்டணி பற்றிய கேள்விக்கு, "இதுவரை அவர்களும் பேசவில்லை, நானும் பேசவில்லை" என்று பதிலளித்தார்.
முன்னதாக, இன்று காலை அடையாறு பிரம்ம ஞானசபையில் நடைப்பயிற்சியின்போது முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்தார் ஓ. பன்னீர்செல்வம். இதைத் தொடர்ந்து, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் உயர்நிலைக் குழுக் கூட்டம் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஒரேநாளில் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்தார் ஓ. பன்னீர்செல்வம். ஆழ்வார்பேட்டையிலுள்ள முதல்வரின் இல்லத்தில் சந்திப்பு நடைபெற்றது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாசல்வரை வந்து வரவேற்றுச் சென்றார்.
O Panneerselvam | ADMK | DMK | MK Stalin | Alliance