கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் தந்தை, மகன் மரணத்தில் தங்களுக்கு சந்தேகமில்லை என நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் தனியார் பள்ளியில் போலி என்சிசி முகாம் நடத்தி மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் உறுப்பினரும் பயிற்சியாளருமான சிவராமன், பள்ளி நிர்வாகிகள் எனப் பலர் கைது செய்யப்பட்டார்கள். இதில் சிவராமன் என்பவர் காவல் துறையினர் கைது செய்வதற்கு முன்பே எலி மருந்து சாப்பிட்டதாகவும், இதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டன. இதில் சிகிச்சைப் பலனின்றி இவர் உயிரிழந்துள்ளார். இவருடைய தந்தையும் நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.
இருவருடைய அடுத்தடுத்த மரணம் சந்தேகத்தைக் கிளப்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் விமர்சித்துள்ளார்கள். ஆனால், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த மரணத்தில் தங்களுக்குச் சந்தேகமில்லை எனத் தெரிவித்துள்ளார்.
"என் கட்சியிலிருந்த ஒரு தம்பி, முன்பு பொறுப்பாளராக இருந்தார். இவர் கிருஷ்ணகிரியில் நடந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். இறுதியில், இவருக்குக் குற்ற உணர்வு ஏற்பட்டு தற்கொலை செய்து உயிரிழந்துவிட்டார். முன்பே விஷம் அருந்தியதால் உயிரிழந்துள்ளார். இந்த மனவேதனையில் இருந்த இவருடையத் தந்தை மது அருந்தி சாலையில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
செய்த குற்றத்துக்காகக் குற்ற உணர்வு ஏற்பட்டுதான் சிவராமன் உயிரிழந்துள்ளார். இவர் குற்றச்செயலில் ஈடுபட்டிருக்கிறார் என்பது தெரிந்தவுடன், இவரைப் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தது நாம் தமிழரைச் சேர்ந்தவர்கள்தான்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஒருவர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டபோது நாங்கள் எதிர்த்தோம். இதை நாங்கள் எதிர்க்கவில்லை. காரணம், யார் உண்மையைப் பேசுவாரோ அவரை நீங்கள் கொன்றுவிடுகிறீர்கள்.
சிவராமன் விஷயத்தில் இதுமாதிரி நடந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், நீண்ட நாள்களுக்கு முன்பு, தான் உயிரிழக்கப்போவதாகவும், மன்னித்துவிடுங்கள் என்றும் எனக்கு வருத்தக் கடிதம் எழுதியிருக்கிறார். பிறகு நான் தம்பிகளிடம் சொல்லி அவரைக் கவனிக்கச் சொன்னேன்.
எனவே, தான் செய்தது தவறாக அவருக்குப் பட்டிருக்கிறது. இதன் காரணமாக, இவர் இந்த முடிவை எடுத்துள்ளார். எனவே, எங்களுக்கு இந்த மரணத்தில் சந்தேகம் இல்லை" என்றார் சீமான்.