
தமிழ்நாட்டில் காலூன்றத் துடிக்கும் பாஜகவின் எண்ணம் ஒருபோதும் நடக்காது என அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் இணைந்து போட்டியிடுவதாக கடந்த ஏப்ரல் மாதம் முடிவு செய்யப்பட்டது. தமிழ்நாட்டுக்கு வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செய்தியாளர்கள் சந்திப்பு மூலம் இதனை அறிவித்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் மேடையில் இருந்தார்கள்.
அதிமுக - பாஜக கூட்டணி உருவானதிலிருந்தே இந்தக் கூட்டணி உறுதியானதாக இல்லை என்ற பேச்சுகள் எழுந்துகொண்டே இருந்தன. தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையும் என்ற கருத்தை பாஜகவினர் தொடர்ந்து கூறி வந்தார்கள். எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர் என்பதை அமித் ஷா ஒரு நேர்காணலில் உறுதிபடக் கூறவில்லை.
இவற்றுக்குப் பதிலடி தரும் விதமாக தமிழ்நாட்டில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியமைக்கும் என எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் கள்ளக்குறிச்சியில் பேசியிருந்தார். மேலும், எந்தக் கொம்பனாலும் அதிமுகவைக் கபளீகரம் செய்ய முடியாது என்றும் அவர் உறுதிபடக் கூறியிருந்தார்.
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என பாஜக கூறி வந்த நிலையில், தனிப்பெரும் கட்சியாக அதிமுக ஆட்சியமைக்கும் என எடப்பாடி பழனிசாமி கூறியது கூட்டணியில் உள்ள விரிசலை அம்பலப்படுத்தியது.
இந்நிலையில், அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா, இந்து தமிழ் திசைக்கு அளித்த பேட்டியில் பல்வேறு கருத்துகளை முன்வைத்துள்ளார். இதில் பாஜகவுக்கு எதிரான அவருடைய கருத்துகள் கவனம் பெற்றுள்ளன.
பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், "பெரும்பான்மை இடங்களை அதிமுக பிடிக்கப்போகிறது. கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. முதல்வர் தேர்வைப் பொறுத்தவரை பாஜகவின் திட்டம் ஒன்றும் பலிக்காது. இபிஎஸ் தான் முதல்வராக வருவார். தமிழ்நாட்டில் காலூன்றத் துடிக்கும் பாஜகவின் எண்ணம், ஒருபோதும் நடக்காது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. தமிழ்நாட்டுக்கான நிதியை மத்திய அரசு தர மறுக்கும் போக்கு கண்டிக்கத்தக்கது" என்றார் அன்வர் ராஜா.
கூட்டணி ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமி முரண்டு பிடித்தால் செங்கோட்டையன், வேலுமணி போன்றவர்களை வைத்து பாஜக புதிய திட்டம் போடலாம் என்கிறார்களே என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில், "இது கற்பனையான கேள்வி. இதுபோன்ற திட்டங்கள் பாஜகவிடம் இருந்தால், அவற்றை அதிமுக தவிடுபொடியாக்கும்" என்று அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.
அதிமுக, பாஜக இடையே இணைப்பு இருந்தாலும் பிணைப்பு இல்லை எனக் கூறப்பட்டு வரும் வேளையில் அதிமுகவின் அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா இவ்வாறு கூறியுள்ளார்.
அதிமுகவின் மூத்த தலைவரான அன்வர் ராஜா கடந்த 2021-ல் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு 2023-ல் மீண்டும் சேர்க்கப்பட்டார்.