சென்னையில் கார் பந்தயம் நடத்தத் தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம்

எஃப்ஐஏ சர்வதேச அமைப்பின் சான்றிதழைப் பெறாமல் நடத்தினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கலாம் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கார் பந்தயம் நடத்தத் தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம்
1 min read

சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்தத் தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், எஃப்ஐஏ சர்வதேச அமைப்பின் சான்றிதழைப் பெறாமல் நடத்தினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கலாம் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இடையே கடந்தாண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. மிக்ஜாம் புயல் காரணமாக, கடந்தாண்டு டிசம்பரில் நடைபெறவிருந்த கார் பந்தயம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த கார் பந்தயம் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது.

இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 8 ஆயிரம் பேர் அமர்ந்து கார் பந்தயத்தைக் காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், சென்னையில் கார் பந்தயம் நடத்தப்படுவதற்கு எதிராக பாஜக செய்தித் தொடர்பாளர் ஏஎன்எஸ் பிரசாத் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தபோது, கார் பந்தயம் நடத்துவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடப்பட்டது. மேலும், எஃப்ஐஏ சர்வதேச அமைப்பின் அனுமதி குறித்து கேள்வியெழுப்பியிருந்தது.

வழக்கு இன்று மாலை மீண்டும் விசாரணைக்கு வந்தது. போக்குவரத்து இடையூறு ஏற்படாது, மக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றும் அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயத்தை நடத்த எந்தத் தடையும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல், எஃப்ஐஏ சர்வதேச அமைப்பின் உரிய அனுமதியைப் பெற்று கார் பந்தயத்தை நடத்தலாம் என்று உத்தரவிட்டுள்ளது.

இதன்பிறகு, எஃப்ஐஏ சான்றிதழ் பெறுவது குறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் மேக்நாத் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.

"எந்தவொரு ஃபார்முலா பந்தயத்தை நடத்த வேண்டும் என்றாலும், எஃப்ஐஏ சர்வதேச அமைப்பின் சான்றிதழ் அவசியம். இந்த அமைப்பின் ஆய்வாளர் ஏற்கெனவே சென்னையில் இருக்கிறார். இவர் ஏற்கெனே கார் பந்தயம் நடைபெறும் இடத்தை ஆய்வு செய்தார்.

மேலும், கார் பந்தயத்தின் அட்டவணையை ஏற்கெனவே வெளியிட்டுள்ளோம். இதில் முதல் இரண்டு மணி நேரம் ஆய்வுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளோம். பந்தயம் நடைபெறுவதற்கு முன்பு பாதுகாப்பு காரணங்களுக்காக எப்போதுமே எஃப்ஐஏ அமைப்பைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஆய்வு செய்வார்கள். பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பிறகுதான் சான்றிதழ் வழங்குவார்கள். இந்தச் சான்றிதழைக் கொண்டுதான் கார் பந்தயத்தை நடத்தப்போகிறோம். கார் பந்தயம் நடைபெறும் இரு நாள்களும் ஆய்வு நடத்தப்படவுள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பொறுத்தவரை, எஃப்ஐஏ சான்றிதழைப் பெற்ற தரமான தடுப்புகள்தான் பயன்படுத்தப்பட்டுள்ளன.

எனவே, எஃப்ஐஏ சான்றிதழ் கட்டாயம் கிடைத்துவிடும்" என்று குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in