பாஜகவுடனான கூட்டணி என்பது பேசி முடிந்த கதை என்றும் அரைத்த மாவையே அரைக்க வேண்டாம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது, உள்ளாட்சி மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களை எதிர்கொள்ளத் தயார் என பல்வேறு கருத்துகளை முன்வைத்தார்.
"விடியா திமுக அரசு ஸ்டாலின் தலைமையில் ஆட்சியமைத்து சுமார் 40 மாத காலம் ஆகிவிட்டது. இந்த 40 மாத காலத்தில் கொலை நடைபெறாத நாளே கிடையாது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. மக்களுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நாங்கள் தினமும் அறிக்கை வாயிலாக சுட்டிக்காட்டி வருகிறோம். பொம்மை முதல்வர் ஆட்சியில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கத் தவறிய அரசு இது. அரசியல்வாதிகள், பொதுமக்கள், காவல் துறைக்குப் பாதுகாப்பில்லை.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 19 மாதங்கள் உள்ளன. அதற்குள் எப்படி கூட்டணி குறித்துப் பேச முடியும். தேர்தல் அறிவித்த பிறகுதான் கூட்டணி அமையும். தேர்தலை நோக்கிதான் அனைத்துக் கட்சிகளும் வரும். தற்பொழுது கூட்டணி அமைவதற்கு சாத்தியங்கள் குறைவு. இருந்தாலும், 2026 தேர்தலில் அதிமுக தலைமையில் சிறந்த கூட்டணியும் ஆட்சியும் அமையும்.
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். கட்சி ஆரம்பித்து மாநாடு நடத்தினால் முறையாக அனுமதி கொடுப்பது மரபு. அதிமுக ஆட்சியில் இருந்தவரை அனைவருக்கும் அனுமதி கொடுத்தோம். அவ்வளவு போராட்டங்கள் அதிமுக ஆட்சியில் நடைபெற்றன. அனைத்துக்கும் அனுமதி கொடுத்தோம், இது ஜனநாயக நாடு. உரிமைகளைக் கோருவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. இதன் அடிப்படையில் மாநாடு, போராட்டம் நடத்தக் கோரியவர்களுக்கு பாதுகாப்புடன் அனுமதி கொடுத்தோம். ஆனால் விடியா திமுக அரசு திட்டமிட்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.
எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்களுக்கும் அனுமதி தர மறுக்கிறார்கள். இவர்களுக்குப் பயம். இந்த ஆட்சியில் அனைத்தும் ஊழல்தான். இது மக்களுக்குத் தெரிந்துவிடும் என்றுதான் பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள்.
அப்படியே பொதுக்கூட்டங்கள் நடைபெற்றாலும், கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு தொடர்கிறார்கள். சில நேரங்களில் நீதிமன்றங்களுக்குச் சென்று அனுமதி வாங்கி பொதுக்கூட்டத்தை நடத்துகிறோம்.
விஜய் புதிதாக வந்தவர், நாங்கள் எதிர்க்கட்சி என்றெல்லாம் எதுவும் இல்லை. நாட்டில் அனைவரும் சமம். அதிமுக ஆட்சியில் நான் முதல்வராக இருந்தபோது, எவ்வளவு போராட்டம் நடைபெற்றது என்பது நாட்டுக்கு தெரியும். இந்தியாவில் அதிக போராட்டங்களைச் சந்தித்த அரசு அதிமுக அரசு. எதுவாக இருந்தாலும், முறையாக அனுமதி கொடுக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்.
உள்ளாட்சித் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல் என எது வந்தாலும் அதை எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளது. பாஜகவுடனான கூட்டணி என்பது ஏற்கெனவே பேசி முடிந்த கதை. அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் அரைக்க வேண்டாம்" என்றார் எடப்பாடி பழனிசாமி.