நித்யானந்தா தலைமறைவாக இருந்துகொண்டு இந்திய நீதித் துறைக்குச் சவால் விடுப்பதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி பரத சக்ரவர்த்தி கருத்து தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுரேகா என்பவர் நித்யானந்தாவின் பெண் சீடர். தேனி மாவட்டம் சேத்தூர் காவல் நிலையத்தில் சுரேகா உள்பட 3 பேர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சுரேகா சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கணேசன் என்பவருக்குச் சொந்தமான 45 ஏக்கர் நிலத்தை நித்யானந்தாவின் அறிவுறுத்தலின் பெயரில் அபகரிக்க முயன்றதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளதாகவும் தாங்கள் இதுபோன்று எந்தச் செயலலிலும் ஈடுபடவில்லை என்றும் சுரேகா தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். மேலும், பொய்யாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர் தனக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்பு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "நித்யானந்தா மீது பல்வேறு வழக்குகளில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளன. இருந்தபோதிலும், நீதிமன்றங்களில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்துகொண்டு இந்திய நீதித் துறைக்குச் சவால் விடுகிறார். ஆனால், நித்யானந்தாவின் சொத்துகளை இந்திய நீதித் துறை பாதுகாக்க வேண்டுமா" என்ற விமர்சனத்தை நீதிபதி முன்வைத்தார்.
இதனிடையே, சுரேகாவுக்கு முன்ஜாமின் வழங்கக்கூடாது என்று கூறி புகார்தாரர் செல்வம் என்பவர் இடையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார்.
தொடர்ந்து, மனுதாரர் சுரேகா இந்த நிலப் பிரச்னையில் மேற்கொண்டு தலையிட மாட்டேன் என உத்தரவாதம் அளித்து பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்தால், முன்ஜாமீன் வழங்குவது குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறிய நீதிபதி வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தார்.