திருச்சி என்.ஐ.டி. பெண்கள் விடுதியில் மாணவி ஒருவருக்குப் பாலியல் அத்துமீறல் நடந்த விவகாரத்தில், குற்றச்சாட்டுக்கு ஆளான பெண்கள் விடுதி வார்டன் பேபி ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 29-ல் திருச்சி என்.ஐ.டி. பெண்கள் விடுதியில் மாணவி ஒருவரிடம் ஒப்பந்த ஊழியர் கதிரேசன் என்பவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். இந்த விவகாரத்தை பெண்கள் விடுதி வார்டன் பேபி சரியான முறையில் கையாளவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து ஆகஸ்ட் 29 தொடங்கி மறுநாள் காலை வரை போராட்டம் நடத்தினார்கள் என்.ஐ.டி. மாணவர்கள்.
இதைத் தொடர்ந்து மாணவிகளிடம் மன்னிப்புக் கோரினார் வார்டன் பேபி. அதற்குப் பிறகு மாணவர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது. ஆனால் வார்டன் பேபி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவிகள் என்.ஐ.டி நிர்வாகத்துக்குக் கோரிக்கை விடுத்தனர்.
இதை தொடர்ந்து, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்கவும், கல்லூரி வளாகத்துக்குள் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அனைத்துவித கடுமையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என திருச்சி என்.ஐ.டி. நிர்வாகம் செய்திக்குறிப்பு வெளியிட்டது.
இந்நிலையில் பெண்கள் விடுதி வார்டனாக இருந்த பேபி தன் வார்டன் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். இவரது ராஜினாமாவைத் தொடர்ந்து பிற வார்டன்கள் சபிதா பேகமும், மகேஸ்வரியும் ராஜினாமா செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.