
கரூரில் தவெக பரப்புரையின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடங்களில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்தார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27 அன்று தவெக தலைவர் விஜய் பரப்புரையில் ஈடுபட்டபோது அதிகமான மக்கள் வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் மக்களிடையே தள்ளுமுள்ளு நடந்ததில் பலர் பாதிக்கப்பட்டனர். இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 40-க்கும் மேற்பட்டோருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கரூருக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்து வரும் அரசியல் தலைவர்கள், உயிரிழந்தோர் குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்குத் தமிழக அரசு சார்பில் தலா ரூ. 10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். மத்திய அரசின் சார்பில் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 நிவாரணத் தொகையும் வழங்கப்படும் எனப் பிரதமர் மோடி அறிவித்தார்.
தவெக சார்பிலும் தலா ரூ. 20 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று (செப்.28) கரூரில் ஆய்வு மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்த திமுக எம்.பி கனிமொழி, தமிழக அரசு அறிவித்த ரூ. 10 லட்சம் நிவாரணத் தொகைக்காக காசோலையை வழங்கி, ஆறுதல் தெரிவித்தார். இதையடுத்து, இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கரூருக்கு வருகை தந்துள்ளார்.
முன்னதாக அசம்பாவிதம் நிகழ்ந்த வேலுச்சாமிபுரத்தில் நிர்மலா சீதாராமன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நிகழ்ந்த சம்பவம் குறித்து அதிகாரிகளிடம் விவரங்களைக் கேட்டறிந்தார். பின்னர் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்து நலம் விசாரித்தார். அவருடன் மத்திய அமைச்சர் எல். முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். நிர்மலா சீதாராமன் வருகையை ஒட்டி கரூரில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.