தமிழ்நாட்டில் திமுக வன்மத்துடன் ஆட்சி நடத்துகிறது: நிர்மலா சீதாராமன் விமர்சனம் | Nirmala Sitharaman |

நாம் செய்யும் நல்ல காரியங்களைச் சொல்வதோடு நின்றுவிடாமல் பொய் பிரசாரங்களையும் தடுத்து நிறுத்த வேண்டும்...
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (கோப்புப்படம்)
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (கோப்புப்படம்)
1 min read

தமிழ்நாட்டில் வன்மத்துடன் திமுக ஆட்சி நடத்தி வருகிறது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்தார்.

கோவையில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீராமன் உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

“மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு என்ன செய்திருக்கிறது? மீனவர்களுக்கு என்ன செய்திருக்கிறது? பெண்களுக்கு என்ன செய்திருக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால் கடந்த 10 ஆண்டுகளில் ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியாகப் பட்டியல்களைப் போடும் அளவு பிரதமர் மோடி பணியாற்றியிருக்கிறார். இவ்வளவு திட்டவட்டமாக மத்திய அரசு செய்து கொண்டிருக்கும்போது பாஜகவினரும் அதை கிராமப்புறங்களில் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று இதை எடுத்துச் சொல்வதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்.

நாம் செய்யும் நல்ல காரியங்களைச் சொல்வதோடு நின்றுவிடாமல் பொய் பிரசாரங்களையும் தடுத்து நிறுத்த வேண்டும். உதாரணத்திற்கு தமிழ்நாட்டில் எப்போதும் சொல்லக்கூடியது என்ன? எங்களுக்கு வர வேண்டிய நிதியை வட மாநிலங்களுக்குக் கொடுத்துவிட்டார்கள் என்கிறார்கள். திமுக பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கட்சி. வரி கொடுத்தால் அதற்கு ஈடாக வரிப்பணத்தில் இருந்தே மாநிலங்களுக்குத் திருப்பிக் கொடுக்கும் அளவுக்கான ஆட்சியைச் செய்து வருகிறோம்.

கோவைதான் தமிழ்நாட்டுக்கு அதிக வருவாய் கொடுக்கிறது. கோவைக்குதான் மத்திய அரசு அதிக நிதியும் ஒதுக்கீடு செய்கின்றது. மத்திய அரசின் திட்டங்களில் மாநிலங்களுக்கு எந்த பாகுபாடும் இல்லை. பிரதமர் மோடி யாருக்கும் குறை வைக்காத ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் இங்குதான் எங்களுக்கு வாக்களித்த உனக்கு நான் நல்லது செய்ய மாட்டேன் என்ற வன்மம் எல்லாம் இருக்கிறது. அப்படிப்பட்ட வன்மத்துடன் தான் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி நடத்தி வருகிறது.

தமிழ்நாட்டிற்கு நன்மை வந்து சேர்ந்துவிடக் கூடாது. வந்துவிட்டால் பிரதமர் மோடிக்குப் பெருமை சேர்ந்துவிடும் என்பதற்காகவே இவர்கள் ஒன்று கூடி ஆள் பலத்தைக் காட்டி எல்லாவற்றையும் தீர்மானம் போட்டு எதிர்க்கிறார்கள். மோடியை எதிர்ப்பதாக நினைத்துக் கொண்டு மக்களுக்கு நல்லதை வர விடாமல் செய்கிறார்கள். ஏனென்றால் மக்களுக்கு நல்லது கிடைத்துவிட்டால் பிரதமர் மோடிக்குப் புகழ் வந்து சேர்ந்துவிடும் என்பதற்காகவே இல்லாத சட்டங்களை எல்லாம் சொல்லி நீதிமன்றங்களை நாடுகிறார்கள். அவர்களை எதிர்த்துக் கேள்வி கேட்க வேண்டும்” என்றார்.

Summary

Union Finance Minister Nirmala Sitharaman has stated that the people should develop the ability to question the DMK government, which is being run with malice.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in