வெற்றி நிச்சயம்: தமிழக இளைஞர்களுக்காக புதிய திட்டம் தொடக்கம்!
படித்த வேலையில்லாத மற்றும் படிப்பை பாதியில் நிறுத்திய இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்க, வெற்றி நிச்சயம் என்ற பெயரில் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழக சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை சார்பில் செயல்படுத்தப்படும் நான் முதல்வன் திட்டத்தின் மூன்றாண்டு வெற்றி விழா மற்றும் வெற்றி நிச்சயம் திட்டம் தொடக்க விழா சென்னையில் இன்று (ஜூலை 1) நடைபெற்றது.
முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது,
`நான் முதல்வன் திட்டத்தின் வெற்றியின் தொடர்ச்சியாக, வெற்றி நிச்சயம் என்கிற திட்டம் இன்று (ஜூலை 1) தொடங்கி வைக்கப்படுகிறது. வெற்றி நிச்சயம் என்பது இந்த திட்டத்தின் பெயர் மற்றும் அல்ல, இதன் கீழ் பயிற்சி பெறும் ஒவ்வொரு இளைஞருக்கும் வெற்றி நிச்சயம் எனபதே இந்த அரசு மற்றும் முதலமைச்சரின் ஒரே இலக்கு.
திறன் பயிற்சியை எப்படிக்கொண்டு சேர்ப்பது என்று யோசித்து அதன் அடிப்படையிலேயே இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பிரத்யேக திறன் பயிற்சி 38 தொழில் பிரிவுகளில், 165 பயிற்சிகளை 500-க்கும் மேற்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் வழங்கப்படவுள்ளது.
அது மட்டுமல்லாமல், திறன் பயிற்சி பெறுவதற்கான கட்டணத்தையும் நமது அரசே செலுத்தவுள்ளது. முதல்கட்டமாக ஆண்டுக்கு 75 ஆயிரம் மாணவர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இந்த திட்டத்திற்காக முதற்கட்டமாக ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள், ஏழை எளிய மாணவர்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் திறன் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
அவர்களுக்கான ஊக்கத்தொகையை அரசு சார்பில் வழங்கவுள்ளோம். இந்த திட்டம் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த இளைஞர் சமூதாயத்தையும் வெற்றபெற்ற சமுதாயமாக மாற்றப்போகிறது என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை’ என்றார்.
இதைத் தொடர்ந்து, வெற்றி நிச்சயம் திட்டத்தைத் தொடங்கி வைத்து, அதன் இலச்சியினை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து ஒளிபரப்பான காணொளியில்,
`தமிழ்நாட்டில் 18 முதல் 35 வயது வரையிலான கல்வியை இடைநிறுத்தியவர்கள், பட்டதாரிகள் என அனைத்து தரப்பும் உள்ளடக்கிய இந்த திட்டத்தில் பிற அரசுத் துறைகளுடன் இணைந்து தேவைப்படும் திறன் பயிற்சி அளித்து, வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்படவுள்ளது.
இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்புக்குமான இணைப்புப் பாலமாக வெற்றி நிச்சயம் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டிருந்தது.