நெல் கொள்முதலில் புதிய சாதனைகள்: தமிழ்நாடு அரசு | Paddy Procurement | Tamil Nadu Government |

முந்தைய ஆட்சியில் அக்டோபர் 1-க்கு பிறகு தான் நெல் கொள்முதல் ஆரம்பிக்கப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
2 min read

நெல் கொள்முதல் செய்யப்படுவதில் திமுக அரசு புதிய சாதனைகளைப் படைத்துள்ளதாக தமிழ்நாடு அரசு சார்பில் அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமானதையடுத்து, கன்னியாகுமரி தவிர்த்து எல்லா மாவட்டங்களிலும் இயல்பைவிட அதிகளவில் மழை பதிவானது. டெல்டா மாவட்டங்களிலும் அதிகளவில் மழை பெய்ததால், விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டார். நெல் கொள்முதல் செய்யப்படாததால், பல்வேறு நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. விவசாயிகளுக்கு இந்தத் தீபாவளி கண்ணீர் தீபாவளியாக மாறியிருக்கிறது என எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்தார்.

இந்நிலையில், நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு புதிய சாதனைகளைப் படைத்துள்ளதாக தமிழ்நாடு அரசு சார்பில் அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"முந்தைய ஆட்சிக் காலத்தைவிட ஒரு மாதம் முன்னதாகவே நெல் கொள்முதல் பணிகளைத் தொடங்கி விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்கிறது அரசு. நடப்பு நெல் கொள்முதல் பருவம் செப்டம்பர் 1 அன்று தொடங்கிய அக்டோபர் 24 வரை 1,853 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 10.40 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. முந்தைய ஆட்சியில் அக்டோபர் 1-க்கு பிறகு தான் நெல் கொள்முதல் ஆரம்பிக்கப்பட்டது.

நான்காண்டுகளில் திமுக ஆட்சியில் சராசரியாக 42,61,386 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் சராசரியாக 22,70,293 மெட்ரிக் டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டன.

தினமும் 2 மணிநேரம் கூடுதலாகவும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் நெல் கொள்முதல் பணிகள் நடைபெறுகின்றன. அரசின் துரித நடவடிக்கையால் கொள்முதல் செய்யப்படும் நெல் ரயில்கள் மூலம் மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகின்றன. தற்போது கொள்முதல் செய்யப்பட்ட 10.40 லட்சம் மெட்ரிக் டன்களில் 8.77 லட்சம் மெட்ரிட் டன் மாவட்டங்களுக்கு நகர்வு செய்யப்பட்டுவிட்டது. மீதம் 1.63 லட்சம் மெட்ரிக் டன் நேரடி கொள்முதல் நிலையங்களில் பாதுகாப்பாக மூடி வைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் வாக்குறுதிப்படி நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2,500 வழங்கியதுடன் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையையும் உயர்த்தி வழங்கியுள்ளார் முதல்வர். நெல் கொள்முதல் ஈரப்பத அளவு 17 சதவீதம் என்பதை 22 சதவீதமாக உயர்த்திட முதல்வரின் கோரிக்கையை ஏற்று நெல் ஈரப்பதத்தினை ஆய்வு செய்ய ஒன்றிய அரசின் குழு தமிழ்நாட்டுக்கு வருகை தந்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதன் முழு விவரம்

Summary

The Tamil Nadu government has officially announced that the DMK regime has achieved new milestones in paddy procurement.

Tamil Nadu Government | Paddy Procurement | MK Stalin |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in