
ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின், ஈரோடு மாவட்டத்தில் விரைவில் ஐ.டி. பார்க் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக நேற்று (டிச.19) ஈரோடு மாவட்டத்திற்குச் சென்றார் முதல்வர் மு.க. ஸ்டாலின். ஈரோட்டின் நஞ்சனாபுரம் கிராமத்தில், தமிழக அரசின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 2 கோடி பயனாளியான சுந்தராம்பாளை (55) சந்தித்து, மருந்து பெட்டகத்தை வழங்கி நலம் விசாரித்தார் ஸ்டாலின்.
இதைத் தொடர்ந்து ஈரோட்டில் உள்ள விசைத்தறிக் கூடம் ஒன்றுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார் ஸ்டாலின். நேற்று இரவு ஈரோடு விருந்தினர் மாளிகையில் அவர் தங்கினார்.
பயண திட்டத்தின் 2வது நாளான இன்று (டிச.20), காலை 10 மணிக்கு ஈரோடு சோலார் புதிய பேருந்து நிலையத்தில் நடந்த அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க. ஸ்டாலின் முடிவுற்ற பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். இதனை அடுத்து புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
குறிப்பாக ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 22 ஊராட்சிகள் பயன்பெறும் வகையில், ரூ. 482.36 கோடி பொருட்செலவில் அமைக்கப்பட்ட சென்னிமலை புதிய கூட்டுக்குடிநீர் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.
அரசு விழாவில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், ஈரோடு மாவட்டத்துக்கென பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்தார். அப்போது ஈரோட்டில் புதிதாக ஐ.டி. பார்க் விரைவில் அமைக்கப்படும் என ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு கவனம் பெற்றுள்ளது.