
பாகன் உள்ளிட்ட இருவரைக் கொன்ற திருச்செந்தூர் கோயில் யானை தெய்வானையை புத்தாக்க முகாமிற்கு அனுப்ப ஆலோசனை நடந்துவரும் வேளையில், எதனால் யானை இருவரைக் கொன்றது என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று (நவ.18) பிற்பகல் 3.30 மணி அளவில், திருச்செந்தூர் கோயில் யானை தெய்வானை, அதன் பாகன் உதயகுமாரையும் அவரது உறவினர் சிசுபாலனையும் தாக்கி மிதித்தது. இதில் இருவரும் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக திருச்செந்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
சம்பவம் நடைபெறுவதற்கு முன்பு பாகன் உதயகுமாரின் உறவினர் சிசுபாலன் யானை தெய்வானையுடன் நீண்ட நேரமாக செல்ஃபி எடுத்துவிட்டு, பிறகு அதைத் தொட்டுள்ளார். புதிதாக ஒருவர் தன்னை தொடுவது பிடிக்காத்தால் சிசுபாலனை கால் மற்றும் தும்பிக்கையால் தாக்கிக் கீழே தள்ளியுள்ளது தெய்வானை யானை.
சிசுபாலனைக் காப்பாற்ற, உடனே பின் பக்கத்திலிருந்து வந்த பாகன் உதயகுமாரையும், யார் என்று உணர்ந்துகொள்ளாமல் தாக்கியுள்ளது யானை. தாக்கிய பிறகு அவர் பாகன் என்பதை உணர்ந்துகொண்டு, அவரை எழுப்ப முயன்றுள்ளது யானை. ஆனால் தாக்குதலில் காயமடைந்து கீழே விழுந்து கிடந்த பாகன் எழுந்திரிக்காததால், ஆத்திரத்தில் மீண்டும் சிசுபாலனைக் கடுமையாக தாக்கியுள்ளது யானை.
இந்த சம்பவத்திற்குப் பிறகு தனிமைப்படுத்தப்பட்டுள்ள யானை தெய்வானையை, இன்று (நவ.19) தமிழக கால்நடைத்துறையின் மண்டல இணை இயக்குநர் தலைமையிலான குழு ஆய்வு செய்தனர். அதன் பிறகு திருச்சி, முதுமலை மற்றும் டாப்ஸ்லிப் ஆகிய இடங்களில் உள்ள யானைகள் மறுவாழ்வு முகாம்களில் ஒன்றிற்கு தெய்வானை யானையை புத்தாக்கப் பயிற்சிக்கு அனுப்ப ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த விவகாரத்தில் வனத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆகியவற்றின் உயர் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்துவிட்டு, புத்தாக்க முகாமிற்கு யானை தெய்வானை அனுப்பப்படும் எனத் தெரிகிறது.