வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

நவம்பர் 7 முதல் 11 வரை தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
1 min read

நவம்பர் முதல் வாரத்தில் வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

நீண்ட கால கணிப்பின் (long range forecast) அடிப்படையில், நடப்பு வடகிழக்குப் பருவமழை காலத்தில் தென் இந்தியாவில் சராசரியைவிட அதிக மழை பொழிவு இருக்கும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் ஏற்கனவே அறிவித்தது.

இந்நிலையில், நடப்பு நவம்பர் மாதத்தின் முதல் வார இறுதியில் தென்மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை முதலில் உருவாகும் எனவும், அதன்பிறகு இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் நேற்று (அக்.31) அறிவித்துள்ளது இந்திய வானிலை ஆராய்ச்சி மையம்.

மேலும், காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவடையும் பட்சத்தில் அது தமிழகத்தை நோக்கி நகரும் வாய்ப்புள்ளதாகவும், அவ்வாறு நேர்ந்தால் தமிழகத்தில் நவம்பர் 7 முதல் 11 வரை கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

கடந்த அக்.14-ல் வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை, பிறகு காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அதனால் சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் ஒரு நாள் (அக்.15) மட்டும் மிக கனமழை பெய்தது.

இந்நிலையில், நடப்பாண்டு வடகிழக்குப் பருவமழைக் காலத்தில், வெப்பச் சலனம் மற்றும் அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு நிலைகளால், நவம்பர் 5-க்குப் பிறகு தமிழகத்தில் மழை பொழிவுக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in