தமிழகத்தில் புதிய பல்லுயிர் பாரம்பரிய தலம்: எந்த மாவட்டத்தில் தெரியுமா?

4.97 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் இந்த கோயில் காடுகள் பல்லுயிரியலைப் பாதுகாத்து, உள்ளூர் காலநிலையை ஒழுங்குப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுகிறது
தமிழகத்தில் புதிய பல்லுயிர் பாரம்பரிய தலம்: எந்த மாவட்டத்தில் தெரியுமா?
1 min read

திண்டுக்கல் மாவட்டம் காசம்பட்டி கோயில் காடுகளை பல்லுயிர் பாரம்பரிய தலமாக தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அறிவித்துள்ளது.

கடந்த 2022-ல் தமிழகத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தலமாக மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அரிட்டாபட்டி அறிவிக்கப்பட்டது, இதன் தொடர்ச்சியாக உயிரிய பன்முகச் சட்டம் 2002-ன் கீழ், திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டத்தில் உள்ள காசம்பட்டி (வீர கோவில்) கோயில் காடுகளை பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவித்து அரசிதழில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

4.97 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் இந்த கோயில் காடுகள் பல்லுயிரியலைப் பாதுகாத்து, உள்ளூர் காலநிலையை ஒழுங்குப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுகிறது. வீர கோவில், கோயில் காடுகளில் உள்ளூர் தெய்வமான வீரணன் குடிகொண்டுள்ளதால் இப்பகுதி உள்ளூர் மக்களால் போற்றிப் பாதுகாக்கப்படுகிறது.

இந்த காடுகள் 48 தாவர இனங்கள், 22 புதர்கள் மற்றும் 29 மூலிகைகள் உட்பட தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் குறிப்பிடத்தக்க பல்லுயிர்களின் தாயகமாக உள்ளதாகவும், இங்கே 12-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள், பல்வேறு சிறிய பாலூட்டிகள், ஊர்வன மற்றும் எண்ணற்ற பூச்சிகள் செழித்து வளர்வதாகவும் தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த பாரம்பரிய தலத்தின் செழுமையான பன்முகத்தன்மை கலாச்சார முக்கியத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புடன், காசம்பட்டி கோயில் காடுகள் பாதுகாப்பு மற்றும் நிலையான பாரம்பரியத்தின் முன்மாதிரியாக உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in