
தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகள் தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் தேர்வு செய்யப்படுவதற்கான புதிய சட்ட மசோதாக்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஏப்.16) முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது,
`மாற்றுத்திறனாளிகளின் குரல் உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிக்கவேண்டும். கடந்த பிப்.27-ல் நடைபெற்ற தந்தை பெரியார் அரசுப் பல்நோக்கு மருத்துவமனை திறப்பு விழாவில் இதை நான் அறிவித்தேன். அடுத்த நாளே என் இல்லத்திற்கு வந்து மாற்றுத்திறனாளித் தோழர்கள் எனக்கு நன்றி தெரிவித்தனர்.
12 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு இதனால் உள்ளாட்சி அமைப்புகளில் வாய்ப்பு கிடைக்கும். கடைக்கோடியில் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் அவர்கள் வாழும் ஊரில் மரியாதை கிடைக்கும். உள்ளாட்சி அமைப்புகளில் அவர்களின் உரிமைகளை நிலைநாட்ட திமுக அரசு உறுதியுடன் இருக்கிறது.
தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து வகையான உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத்திறனாளுக்கு நியமன முறையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தக்க சட்ட மசோதா அறிமுகப்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவித்திருந்தோம். தற்போது அந்த சட்ட மசோதாவை முன்மொழிவதில் நான் வாழ்நாள் பெருமையை அடைகிறேன்.
அருந்ததி இன மக்களுக்கு மூன்று சதவீத உள் ஒதுக்கீட்டை வழங்கும் சட்ட மசோதாவை இதே மாமன்றத்தில் தாக்கல் செய்யும் பெருமையை நான் அடைந்தேன். 2009-ல் அந்த வாய்ப்பை அன்றைய முதல்வர் கலைஞர் எனக்கு வழங்கினார். அதே மனநிறைவு இன்றும் எனக்கு உள்ளது.
தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், அதாவது கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் மாற்றுத் திறனாளிகள் நேரடியாகத் தேர்தலில் போட்டியிடாமல், நியமன முறையில் உறுப்பினர்கள் ஆக்கப்படுவார்கள்.
இது மூலம் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளின் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட்டு, அவர்கள் தங்களுக்கான வாய்ப்புகளையும், சிறப்புரிமைகளையும் சமமாகப் பெறுவதற்கு இந்த சட்ட மசோதாக்கள் வழிவகுக்கும். இது எல்லோருக்கும் எல்லாமும் என்று இந்த அரசு தொடர்ந்து வலியுறுத்தும் சமூக நீதியை அடைவதற்கான ஓர் முன்னெடுப்பு’ என்றார்.
இதைத் தொடர்ந்து, 2025-ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (திருத்தச்) சட்ட மசோதா மற்றும் 2025-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் (இரண்டாம் திருத்தச்) சட்ட மசோதா, தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.