
தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் ஆகியவற்றின் பொறுப்புகளுக்குப் புதிய நபர்களை நியமித்துத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக ரெவரன்ட் ஃபாதர் ஜோ அருண், துணைத் தலைவராக எம்.எம். அப்துல் குத்தூஸ் என்கிற இறையன்பன், உறுப்பினர்களாக ஹெமில்டன் வெல்சன், ஏ. சொர்ணராஜ், நாகூர் ஏ.எச். நஜிமுதீன், பிரவீன் குமார் தாட்டியா, ராஜேந்திர பிரசாத், எம். ரமீத் கபூர். ஜெ. முகமது ரபி, எஸ். வசந்த ஆகியோர் தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக C. பெர்னாண்டஸ் ரத்தின ராஜா தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.
2021-ல் திமுக ஆட்சி அமைந்ததும் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பீட்டர் அல்ஃபோன்ஸ் மூன்றாண்டுகளுக்கு நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து புதிய தலைவர் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் முதல்முறையாக 1989-ல் சிறுபான்மையினர் ஆணையம் உருவாக்கப்பட்டது. இதை அடுத்து 2010-ல் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையச் சட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டது.
மேலும், தமிழ்நாட்டில் வாழும் சிறுபான்மையினரின் பொருளாதார நிலையை உயர்த்த, தமிழக அரசால் 1999-ல் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் புதிதாக உருவாக்கப்பட்டது.