
நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி, உடல்நலக்குறைவால் இன்று (ஜன.12) காலை உயிரிழந்தது.
தமிழகத்தின் பிரசித்தி பெற்ற பழமையான சிவாலயங்களில் ஒன்று, திருநெல்வேலி நகரத்தில் உள்ள அருள்மிகு காந்திமதி அம்மன் சமேத நெல்லையப்பர் திருக்கோயில்.
கடந்த 1985-ல் நயினார் பிள்ளை என்கிற பக்தரால் நெல்லையப்பர் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது காந்திமதி யானை. இதைத் தொடர்ந்து ஏறத்தாழ 40 ஆண்டுகளாக நெல்லையப்பர் கோயிலின் அடையாளமாகவே வலம்வந்தது காந்திமதி.
காந்திமதி 50 வயதைக் கடந்தபிறகு வயது முதிர்வு காரணமாக அதற்கு மூட்டு வலி உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதனாலேயே கடந்த 5 வருடங்களாக மருத்துவக் குழு காந்திமதிக்கு சிகிச்சை அளித்துவந்தது. எனினும், கடந்த ஓரிரு மாதங்களாக காந்திமதி மூட்டு வலி அதிகரித்துள்ளது.
மருத்துவக் குழுவினர் அதற்குத் தொடர் சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று காலை காந்திமதியால் எழ முடியவில்லை. இதனால் உடனடியாகக் கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நேற்று மாலை கோயில் வளாகத்திற்குள் 2 கிரேன்கள் கொண்டு வரப்பட்டு, பெல்ட் கட்டி காந்திமதி தூக்கி நிறுத்தப்பட்டது.
சிறிது நேரம் நின்றிருந்த யானை மீண்டும் கீழே படுத்துக்கொண்டது. இதைத் தொடர்ந்து இன்று (ஜன.12) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது காந்திமதி. இதனை அடுத்து காலை 11 மணி முதல் காந்திமதிக்கு அஞ்சலி செலுத்த பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் காந்திமதியின் இறுதி சடங்கிற்குப் பிறகே பக்தர்கள் தரிசனத்திற்கு நெல்லையப்பர் கோயில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.