திருநெல்வேலி இளைஞர் கவின் ஆணவக் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்தவர் கவின் செல்வகணேஷ். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் கேடிசி நகர் அருகே சம்பந்தப்பட்ட பெண் தனியார் கிளினிக்கில் பணிபுரிந்து வருகிறார். இருவரும் ஒன்றாகப் படித்துள்ளார்கள். 10 வருடங்களாக இருவருக்கும் பழக்கம்.
இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படும் நிலையில், இவர்களுடைய காதலில் பெண் வீட்டார் பெற்றோருக்கு விருப்பம் இல்லை. இதுதொடர்புடைய விவரங்கள் விசாரணையில் முழுமையாக வெளியில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெண்ணின் இளைய சகோதரர் சுர்ஜித் கடந்த ஞாயிறன்று கவினை ஆணவப் படுகொலை செய்துள்ளார்.
சுர்ஜித்தின் பெற்றோர்கள் காவல் உதவி ஆய்வாளர்களாக உள்ள நிலையில், இருவரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். சுர்ஜித் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது குண்டர் தடுப்புச் சட்டமும் பாய்ந்துள்ளது. சுர்ஜித் மற்றும் அவருடைய பெற்றோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுர்ஜித்தின் பெற்றோர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை. இவர்களைக் கைது செய்தால் மட்டுமே கவினின் உடலை வாங்குவோம் என கவினின் உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் இந்த வழக்கானது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:
"தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கவின் செல்வகணேஷ், திருநெல்வேலி மாநகரில் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, இறந்த கவின் செல்வகணேஷின் தாயார் கொடுத்த புகார் மனுவின் மீது பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டம் உள்ளிட்டவற்றின் கீழ் குற்றம்சாட்டப்பட்ட சுர்ஜித், அவரது தந்தை சரவணன் மற்றும் தாயார் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டவரும் குற்றம்சாட்டப்பட்ட சுர்ஜித்தின் சகோதரியும் பழகி வந்த நிலையில், இதுதொடர்பான பிரச்னையில் இந்தக் கொலை நடந்துள்ளதாகத் தெரிய வருகிறது. குற்றம்சாட்டப்பட்ட சுர்ஜித் அதே நாளில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார். மேலும் அவர் மீது இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குற்றம்சாட்டப்பட்டவரின் தந்தை மற்றும் தாய் ஆகியோர் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் காவல் சார்பு ஆய்வாளர்களாகப் பணியாற்றி வருகிறார்கள். விசாரணை பாரபட்சமற்றதாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் இருப்பதை உறுதிசெய்யும் விதமாக இவர்கள் இருவரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.
இவ்வழக்கின் தன்மை மற்றும் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டும் சுதந்திரமான, நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை உறுதி செய்வதற்காக இந்த வழக்கு குற்றப்பிரிவு, குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சிபிசிஐடி) மாற்றப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Honour Killing | Nellai Honour Killing | Kavin | Surjith