
நெல்லையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து விசிக தலைவரும் எம்.பி.யுமான திருமாவளவன் ஆறுதல் கூறினார்.
இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
"கவின் செல்வகணேஷின் தாய் மற்றும் தந்தை, பாட்டி ஆகியோரைச் சந்தித்து ஆறுதல் கூறினோம். நடந்த விவரங்கள் குறித்து கேட்டறிந்தோம். இழப்பீட்டினால் இந்தத் துயரத்தைத் துடைத்தெறிய முடியாது.
கவினை நயந்து பேசி நம்ப வைத்து குறிப்பிட்ட ஓர் இடத்துக்கு வரழைத்து இந்தப் படுகொலையைச் செய்துள்ளார்கள். ஏற்கெனவே, இருவருக்கும் இடையிலான உறவு காதலோ, நட்போ இருதரப்பு குடும்பத்தினருக்கும் தெரிந்திருக்கிறது. இரு தரப்பினரும் இது தேவையற்றது என்று தடுத்திருக்கிறார்கள். இதையும் கடந்து இருவருடைய உறவும் தொடர்ந்துள்ளது.
காவல் துறையினருக்கு முன்கூட்டியே இந்தப் படுகொலைச் சம்பவம் தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது. தனக்குத் தெரிந்த காவல் அதிகாரியின் எல்லைக்குள் இதைச் செய்ய வேண்டும் எனத் திட்டமிட்டிருக்கிறார்கள். இதன் அடிப்படையில் தான் இந்த எல்லைக்குள் வந்து அவர்கள் படுகொலையைச் செய்திருக்கிறார்கள் என்று யூகிக்க முடிகிறது. தனி ஒரு நபராக இந்தக் கொலையை அவன் செய்திருக்க வாய்ப்பு இல்லை என்று சந்தேகப்பட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
அவன் மட்டுமே கொலை செய்தான் என்று வழக்கை முடிப்பதற்கு அந்தக் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் அல்லது காவல் ஆய்வாளர்கள் போன்றவர்கள் முயற்சித்திருக்கிறார்கள். இதில் வேறு யாருக்கும் சம்பந்தம் இல்லை, சுர்ஜித் என்பவன் மட்டும் தான் இதில் சம்பந்தப்பட்டவன், அப்படியே மனுவில் குறிப்பிடுங்கள் வழக்குப்பதிவு செய்கிறோம் என்று தொடக்கத்தில் அழுத்தம் கொடுத்துள்ளார்கள். இதற்கு கவினின் தாயார் உடன்படவில்லை. பிறகு, கவின் தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரை ஏற்றுக்கொண்டு தான் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள்.
முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளவர்களைக் கைது செய்வதில் என்ன தயக்கம் என்பது தான் கவினின் தந்தை எழுப்பும் கேள்வி. இதில் நியாயம் இருப்பதாக நாங்கள் கருதுகிறோம்.
எனவே, தமிழ்நாடு காவல் துறை முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சுர்ஜித்தின் தாயாரையும் சட்டப்படி கைது செய்து புலன் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். வேறு யாரும் இதில் சம்பந்தப்பட்டுள்ளார்களா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டிய தேவை உள்ளது. தென் மாவட்டங்களில் நிகழ்ந்த அத்தனைக் கொலைகளின் பின்னாலும் கூலிப்படையினரின் கைவரிசை இருந்துள்ளது.
சுர்ஜித்தின் இன்ஸ்டகிராமை பார்க்கும்போது, அவர் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு படத்தைப் பதிவிட்டிருக்கிறார். ஒவ்வொன்றிலும் வெவ்வேறு வகையிலான கொடுவாள்களை ஏந்தியிருக்கிறார். நாயைப் பிடித்துக்கொண்டு விரைவில் ஒரு சம்பவம் நடக்கப்போகிறது என்பதைப் போன்ற சமிக்ஞையை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆகவே, இவர் திடீரென ஆத்திரப்பட்டு செய்யவில்லை.
இது நீண்ட கால செயல் திட்டமாகத் தெரிகிறது. திட்டமிட்டு தான் படுகொலை நடந்திருப்பதாகத் தெரிகிறது. கூலிப் படையின் கைவரிசை இருக்குமோ என்று கவின் தரப்பில் சந்தேகப்படுகிறார்கள்.
சிபிசிஐடி விசாரணையில் முறைப்படி அவர்கள் சட்டபூர்வமான விசாரணையை மேற்கொள்ள வேண்டும். பெற்றோர் இருவரையும் தீவிர விசாரணைக்கு உட்படுத்தினால் தான் பின்னாடி இருக்கும் கூலிப்படையினரைக் கண்டறிய முடியும்.
விசிக சார்பில் தமிழ்நாடு அரசுக்கு நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு என்ன இழப்பீடுகளைத் தர வேண்டுமோ அதைத் தர வேண்டும். அரசு வேலைவாய்ப்பு தர வேண்டும். நிலம் வழங்க வேண்டும். புதிய வீடு கட்டித் தர வேண்டும். இவை அனைத்தும் சட்டபூர்வமாக இருக்கும் உரிமைகள், இழப்பீடுகள். இதில் எந்தத் தயக்கமும் ஏற்பட்டுவிடாத வகையில் முதல்வர் இதில் நேரடியாகத் தலையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதியையும் வழங்க வேண்டும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும். கவின் குடும்பத்துக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். முறையான இழப்பீடு வழங்க வேண்டும், சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்" என்றார் திருமாவளவன்.
Honour Killing | Nellai Honour Killing | Thirumavalavan | VCK | Kavin | Surjith