நெல்லை ஆணவக் கொலை வழக்கில் கைதான சுர்ஜித்தின் பெற்றோர்களான காவல் உதவி ஆய்வாளர்கள் இருவரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்தவர் கவின் செல்வகணேஷ். இவர் சென்னையைச் சேர்ந்த ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்திருக்கிறார். இவர் தலித் வகுப்பைச் சேர்ந்தவர்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் கேடிசி நகர் அருகே சம்பந்தப்பட்ட பெண் தனியார் கிளினிக்கில் பணிபுரிந்து வருகிறார். இப்பெண்ணை கவின் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இப்பெண் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்.
இப்பெண்ணின் பெற்றோருக்கு கவினுடன் பேசுவதில் விருப்பமில்லை எனத் தெரிகிறது. கடந்த 27 அன்று கேடிசி நகரில் அப்பெண் பணிபுரியும் கிளினிக்கில் தனது உறவினரை அழைத்துச் சென்றிருக்கிறார் கவின்.
அப்போது அப்பெண்ணின் இளைய சகோதரர் சுர்ஜித், கவினைத் தனியாக அழைத்துச் சென்று பேசியுள்ளார். அப்போது கவின் மீது கடுமையானத் தாக்குதலை நடத்தி சுர்ஜித் ஆணவக் கொலை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாளையங்கோட்டை காவல் துறையினர் சுர்ஜித்தைக் கைது செய்துள்ளார்கள். சுர்ஜித்தின் பெற்றோர்களான காவல் உதவி ஆய்வாளர்களிடம் விசாரணை நடத்தியது.
சுர்ஜித் பெற்றோர்களைக் கைது செய்ய வேண்டும் எனக் கோரி கவினின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக, சுர்ஜித்தின் பெற்றோர்களான காவல் உதவி ஆய்வாளர்கள் இருவரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.
Honour Killing | Nellai Honour Killing | Kavin | Surjith