நீட் விவகாரம்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடக்கம்!

நீட் விலக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடர தீர்மானம்.
நீட் விவகாரம்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடக்கம்!
1 min read

நீட் விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக சட்டப்பேரவை அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் சென்னையில் தொடங்கியது.

தமிழக சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்ட மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தர மறுத்ததாக கடந்த வாரம் சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, நீட் விலக்குச் சட்ட மசோதாவிற்கு மத்திய அரசு ஒப்புதலை நிறுத்தி வைத்துள்ளது தொடர்பாக தமிழக சட்டப்பேரவை அனைத்துக் கட்சித் தலைவர்களின் கலந்தாலோசனைக் கூட்டம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

அதிமுகவும், பாஜகவும் இந்த கூட்டத்தைப் புறக்கணித்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் அங்கம் வகிக்கும் திமுக உள்ளிட்ட கட்சி எம்.எல்.ஏ.க்கள் இதில் பங்கேற்றனர். இதில், முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது,

`தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கின்ற நீட் தேர்வை ஆரம்பத்தில் இருந்தே திமுக எதிர்த்து வருகிறது. பொதுவாகவே நுழைவுத்தேர்வு என்பது ஏழை எளிய கிராமப்புற மாணவர்களை பாதிக்கக்கூடியது. அதனால் அதை தவிர்த்து பள்ளிக்கல்வித் திறனை மட்டும் அடிப்படையாகக் கொண்ட மாணவர் சேர்க்கை அமையவேண்டும் என்பதில் அசைக்கமுடியாத உறுதிகொண்டதாக நமது அரசு இருக்கிறது.

நேற்று உச்ச நீதிமன்றத்தில் வெளியான தீர்ப்பு நமக்கு மாபெரும் நம்பிக்கையை வழங்கியுள்ளது. நமது சட்டப்போராட்டத்தை தொய்வில்லாமல் தொடர்ந்து நடத்தினால் நீட் தேர்வில் இருந்து விலக்குப் பெறமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

எனவே, வரைவுத் தீர்மானத்தை துணை முதல்வர் உங்களிடத்தே படிப்பார்கள். அதன் மீது அனைவரும் தங்களது ஆலோசனைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாசித்த தீர்மானம்,

`மருத்துக் கல்லூரி மாணவர் சேர்க்கை முறையில் தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு முறையில் இருந்து விலக்கு அளிப்பதற்காக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிறைவேற்றிய சட்டமுன்வடிவுக்கு மாண்புமிகு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தர மறுத்துள்ள நிலையில் இந்த விலக்கைப் பெறுவதற்காக தமிழ்நாடு அரசு தொடர்ந்து சட்டப் போராட்டத்தை நடத்தவேண்டும் என்று இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒருமனதாக தீர்மானிக்கிறது.

இந்த வகையில் நீட் தேர்வு முறையை எதிர்த்து கடந்த ஜூலை 2023-ம் ஆண்டு தமிழ்நாடு அரசால் மாண்பமை உச்ச நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கினை தீவிரமாக முன்னெடுத்துச் செல்வது, நமது சட்டமுன்வடிவுக்கு மத்திய அரசு ஒப்புதல் தர மறுத்துள்ளதை எதிர்த்து தேவைப்படும் புதிய வழக்கு ஒன்றினை மாண்பமை உச்ச நீதிமன்றத்தில் தொடுப்பது உள்ளிட்ட அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் சட்ட வல்லுனர்களுடன் கலந்தாலோசனை செய்து மேற்கொள்வதென ஒருமனதாக தீர்மானிக்கப்படுகிறது’.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in