
மத்தியில் காங்கிரஸும் மாநிலத்தில் திமுகவும் இருந்தபோது தான் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முறை கொண்டுவரப்பட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி உள்பட மொத்தம் 33 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. மீதமுள்ள 7 தொகுதிகளில் அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிக 5 தொகுதிகளிலும், எஸ்டிபிஐ மற்றும் புதிய தமிழகத்துக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.
40 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமி 40 வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்தினார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐ கட்சித் தலைவர்கள் இதில் பங்கேற்றார்கள்.
இந்தக் கூட்டத்தில் நீட் தேர்வு முறை குறித்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
"நீட் தேர்வைக் கொண்டு வந்தது யார்? யாருடைய ஆட்சியில் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது? 2010 டிசம்பரிலேயே நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. மத்திய இணை அமைச்சராக திமுகவின் நாமக்கல் காந்தி செல்வன் இருந்தபோது கொண்டுவரப்பட்டுள்ளது. அப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. இரண்டு கட்சிகளும் மாறிமாறி பொய் பேசுகின்றன.
இதற்குப் பரிகாரம் காண்பதற்காக அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, கிராமப்புற மாணவர்களுக்காக 2017-18-ல் மருத்துவப் படிப்புக்கான உள்ஒதுக்கீடு சட்டம் கொண்டுவரப்பட்டது. 3,145 மருத்துவப் படிப்பு இடங்களில் 9 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. எதிர்க்கட்சியோ, மக்களோ யாரும் கோரிக்கை வைக்கவில்லை. நானும் அரசுப் பள்ளியில் படித்த மாணவன். என் மனதில் தோன்றியதுதான் இது. ஏழை குடும்பத்தில் பிறந்த மாணவ, மாணவிகள் ஏன் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கக் கூடாது? அந்த வாய்ப்பை எப்படி உருவாக்கித் தர வேண்டும் என்று மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுடனும், சட்ட வல்லுநர்களுடனும் கலந்து பேசினேன்.
இதற்கு ஒரு சட்டத்தை இயற்றி நிறைவேற்றினால், அவர்களுக்கான வாய்ப்பு கிடைக்கும் என்றார்கள். அதை நாங்கள் செய்தோம். இதன்மூலம், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காக மருத்துவப் படிப்புக்கு 7.5 சதவிகிதம் உள் இடஒதுக்கீட்டுக்கான சட்டத்தை இயற்றினோம். அவர்களுக்கு ஒரு ரூபாய்கூட செலவு கிடையாது. அவர்களுடைய மருத்துவப் படிப்புக்கான கட்டணச் செலவை அரசு ஏற்கும். இதன்மூலம், ஏழை எளிய குடும்பத்தில் பிறந்த மாணவ, மாணவிகள் மருத்துவர்கள் ஆகிறார்கள். இதுதான் சாதனை" என்றார் எடப்பாடி பழனிசாமி.