
தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பல ஆண்டுகளாக நடைபெற்ற சட்டவிரோத தாது மணல் கொள்ளை குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் சிறப்பு விவாதம் கோரியுள்ளது சிபிஎம்.
கடந்த 2000-2016 காலகட்டத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட கடலோரப் பகுதிகளில் நடைபெற்ற தாது மணல் கொள்ளை விவகாரம் தொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை கூட்டு விசாரணை மேற்கொள்ள நேற்று முன்தினம் (பிப்.17) உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
இந்நிலையில், இது தொடர்பாக தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியதாவது,
`தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்றுள்ள சட்டவிரோத தாது மணல் கொள்ளை பற்றி விரிவான விசாரணை மேற்கொண்ட உயர் நீதிமன்றம், 16 ஆண்டுகளுக்கு பிறகு தாதுமணல் கொள்ளை நடந்திருப்பதை உறுதி செய்துள்ளது.
அத்துடன் அரசியல்வாதிகள், அதிகாரிகள், சுரங்க நிறுவனங்கள் இடையிலான தொடர்பை சிபிஐ விசாரிக்க வேண்டுமென்று வரவேற்புக்குரிய தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட கடற்கரை மணலுக்காக ராயல்டி மற்றும் அபராதமாக ரூ 5,832.29 கோடி வசூலிக்க உத்தரவிட்டுள்ளது.
அபராத தொகையை முழுமையாக வசூலிப்பதுடன், கிடங்குகளில் இருக்கும் தாது மணலை மத்திய அரசிடம் ஒப்படைத்து அதில் கிடைக்கும் லாபத்தை தமிழ்நாட்டு கஜானாவில் சேர்க்க வேண்டும்.
இந்த முறைகேடு தொடர்பாக, ஐஏஎஸ் அதிகாரிகள் ககன்தீப் சிங் பேடி, சத்யபிரதா சாஹூ மற்றும் வழக்கறிஞர் வி. சுரேஷ் ஆகியோர் சமர்ப்பித்த அனைத்து அறிக்கைகளையும், தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் சமர்ப்பித்து, இது தொடர்பான சிறப்பு விவாதத்தை முன்னெடுக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.