
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை தேசிய ஜனநாயகக் கூட்டணி புறக்கணிப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு பிப்ரவரி 5 அன்று இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இண்டியா கூட்டணியில் 2021 சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் 2023 இடைத்தேர்தலில் ஈரோடு கிழக்கு காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளதால், ஈரோடு கிழக்கு தொகுதி மீண்டும் காங்கிரஸுக்கு ஒதுக்கப்படுமா அல்லது திமுக போட்டியிடுமா என்ற கேள்வி இருந்தது. இண்டியா கூட்டணி சார்பில் திமுக போட்டியிடுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளரும், ஈரோடு கிழக்கு முன்னாள் எம்எல்ஏவுமான வி.சி. சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப் புறக்கணித்த அதிமுக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலையும் புறக்கணிக்குமா அல்லது கொங்கு மண்டலம் என்பதால் தனது பலத்தை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமி வேட்பாளரை நிறுத்துவாரா என்ற கேள்வி இருந்தது.
ஜனவரி 11 அன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையிலுள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதிமுகவைத் தொடர்ந்து தேமுதிகவும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தது.
இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னையில் இன்று ஆலோசனை நடைபெற்றது. மத்திய இணையமைச்சர் எல். முருகன், பாஜக மேலிட இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் இந்த ஆலோசனையில் ஈடுபட்டார்கள்.
இதன் முடிவில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்புடைய அறிக்கையில், "ஈரோடு கிழக்கு தொகுதியைப் பொறுத்தவரை, நடைபெறவிருப்பது, இடைத்தேர்தலுக்கான இடைத்தேர்தல். கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலின்போது, பொதுமக்களைப் பட்டியில் அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்தியதைப் பார்த்தோம். ஆளுங்கட்சி என்ற அதிகார மமதையில் திமுக தேர்தல் விதிமுறைகளை எல்லாம் மீறிச் செயல்பட்டதை நாம் அனைவருமே எதிர்கொண்டோம்.
வரும் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல், திமுகவை முழுமையாக அகற்றவிருக்கும் தேர்தல். அந்த இலக்கை நோக்கியே, தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதன் நடுவே, இடைத்தேர்தலில் மீண்டும் கால்நடைகளைப் போலப் பொதுமக்களை அடைத்து வைக்க திமுகவை அனுமதிக்கத் தேசிய ஜனநாயகக் கூட்டணி விரும்பவில்லை.
மக்கள் நலன் விரும்பும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் நன்கு கலந்தாலோசித்த பிறகு, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை, தேசிய ஜனநாயகக் கூட்டணி புறக்கணிப்பதாக முடிவெடுத்துள்ளோம். 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை அகற்றி, மக்களுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நல்லாட்சியை வழங்குவதே எங்கள் இலக்கு" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.