மே 2 அன்று நேரில் ஆஜராகிறேன்: ரூ. 4 கோடி விவகாரம் குறித்து நயினார் நாகேந்திரன்

“இதை அரசியல் சூழ்ச்சியாகவே நான் பார்க்கிறேன். முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர்”.
கோப்புப் படம்
கோப்புப் படம்

ரூ. 4 கோடி விவகாரம் குறித்து மே 2 அன்று நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உள்ளதாக நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார்.

சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு மார்ச் 6 அன்று புறப்பட்ட நெல்லை விரைவு ரயிலில் சந்தேகத்துக்குரிய நபர்கள் நிறைய பணம் எடுத்துச் செல்வதாகத் தேர்தல் பறக்கும் படையினருக்குத் தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து, தாம்பரம் ரயில் நிலையத்தில் வைத்து நடத்தப்பட்ட சோதனையில் மூன்று பேர் உரிய ஆவணங்களின்றி ஏறத்தாழ ரூ. 4 கோடியை ரொக்கமாக எடுத்துச் சென்றது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மூன்று பேரில் இருவர் திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்பது தெரியவந்தது.

இதன் பிறகு தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 4 கோடிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நயினார் நாகேந்திரன் விளக்கமளித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், பறிமுதல் செய்யப்பட்ட பணம் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் பணம் என்றும் வாக்காளர்களுக்கு கொடுக்கத்தான் பணத்தை எடுத்து சென்றதாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.

இதைத் தொடர்ந்து ஏப்ரல் 22-ல் நேரில் வந்து ஆஜராகி இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் காவல் துறை சம்மன் அனுப்பியது. ஆனால், விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் நயினார் நாகேந்திரனுக்கு மே 2-ல் ஆஜராக வேண்டும் என மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அந்த பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. இதை நான் பலமுறை கூறிவிட்டேன். எங்கேயோ பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை என்னுடன் தொடர்புபடுத்தி உள்ளனர். இதை அரசியல் சூழ்ச்சியாகவே நான் பார்க்கிறேன். முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். தமிழ்நாட்டில் ரூ. 200 கோடிக்கு மேல் பணம் கைப்பற்றப்பட்டது. ஆனால் ரூ. 4 கோடி பணம் பற்றி மட்டும் விசாரிக்கின்றனர். கைதான 3 பேரையும் காவல்துறை மிரட்டி அவர்களிடம் இருந்து வாக்குமூலம் பெற்றிருக்கலாம். எனக்கு வழங்கப்பட்டுள்ள சம்மன் குறித்து வரும் மே 2 அன்று நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உள்ளேன்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in