சண்டாளன் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய ஆவடி காவல் ஆணையரகத்துக்கு தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலின்போது பிரசார மேடையில் நாம் தமிழர் மூத்த நிர்வாகி சாட்டை துரைமுருகன் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியை விமர்சிக்கும் வகையில், ஒரு பாடலைப் பாடினார். இந்தப் பாடலில் சண்டாளர் என்ற சொல் இடம்பெற்றிருந்தது. இதுதொடர்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் இவர் கைது செய்யப்பட்டார். பிறகு நீதிமன்றத்தால் இவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தானும் இந்தச் சொல்லைப் பயன்படுத்துவதாகவும், முடிந்தால் தன்னைக் கைது செய்யுமாறும் அவர் பேசினார். இந்த விவகாரம் பூதாகரமானது.
இதன்பிறகு, சண்டாளர் என்ற சொல்லைப் பயன்படுத்தினால் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் பரிந்துரைத்தது.
இந்த நிலையில், சண்டாளன் என்ற சொல்லைப் பயன்படுத்தியதற்காக சீமான் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆவடி காவல் ஆணையரகத்துக்குள்பட்ட பட்டாபிராம் காவல் நிலையத்துக்கு இந்த உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது.