
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இயற்கை வேளாண்மையில் சிறந்த ஆராய்ச்சியை மேற்கொள்ளும் மாணவருக்கு நிகழாண்டு முதல் நம்மாழ்வார் விருது வழங்கப்படும் என ஆளுநர் ஆர்.என். ரவி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"2025-ம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் இயற்கை வேளாண்மையில் நம்மாழ்வார் சிறந்த முதுகலை ஆராய்ச்சி விருதை வழங்குவதில் பெருமை கொள்கிறார்.
சிறந்த வேளாண் விஞ்ஞானியும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான மறைந்த டாக்டர் ஜி. நம்மாழ்வாரின் நீடித்த பாரம்பரியத்தையும், இயற்கை வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறையில் அவரது முன்னோடிப் பணிகளையும் முன்னெடுத்துச் செல்வதற்காக இந்த விருது நிறுவப்பட்டுள்ளது. இந்த விருது, இயற்கை வேளாண்மையை முன்னேற்ற ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியாவின் நிலையான விவசாய முன்னேற்றத்தையும், உலகளாவிய இயற்கை வேளாண்மைத் துறையில் அதன் வளர்ந்து வரும் இருப்பையும் ஆதரிக்கிறது.
இந்த விருது ஆண்டுதோறும் கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் இயற்கை வேளாண்மையில் சிறந்த குறிப்பிடத்தக்க ஆராய்ச்சியை மேற்கொண்ட மாணவருக்கு வழங்கப்படும். பல்கலைக்கழகத்தின் வருடாந்திர பட்டமளிப்பு விழாவில் இந்த விருது வழங்கப்படும். இந்த விருது ரூ. 50 ஆயிரம், தங்கப் பதக்கம் மற்றும் பாராட்டுப் பத்திரம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்" என ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.