கோயிலில் தன்னிடம் சாதி கேட்ட அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை நமிதா கோரிக்கை வைத்துள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நமிதா அவருடைய கணவருடன் சென்றிருக்கிறார்.
இந்நிலையில் கோயிலில் இருந்த அதிகாரி ஒருவர் நமிதாவிடம் நீங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்? நீங்கள் எந்த சாதியைச் சேர்ந்தவர்? போன்ற கேள்விகளை எழுப்பியதாகக் கூறி அந்த அதிகாரி மீது குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பான காணொளியில், “இன்று எனக்கு மிகவும் வித்தியாசமான அனுபவம் ஒன்று கிடைத்தது. கோயிலில் இருந்த அதிகாரி ஒருவர் எங்களிடம் மிகவும் அவமரியாதையாக நடந்து கொண்டார்.
நான் ஹிந்து என்பதற்கான சான்றிதழையும், என்னுடைய சாதிக்கான சான்றிதழையும் காண்பிக்க சொன்னார். நான் ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர். என்னுடைய திருமணம் திருப்பதியில் நடந்தது. என்னுடைய குழந்தைகளுக்கு கூட கிருஷ்ணரின் பெயர்தான் வைத்துள்ளேன்.
இதுவரை நான் நிறைய கோயிலுக்கு சென்றிருக்கிறேன், ஆனால் என்னிடம் யாரும் இப்படி பேசியதில்லை. இதுபோன்று பேசுவது சரியில்லை. எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் சேகர் பாபுவிடம் கேட்டுக்கொள்கிறேன்” என்று நமிதா பேசியுள்ளார்.