
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி காலமானார். அவருக்கு வயது 74.
சேந்தமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான பொன்னுசாமி, மாரடைப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். அவருக்கு ஏற்கெனவே இருமுறை மாரடைப்பு ஏற்பட்டு ஆஞ்சியோ செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதிமுகவில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய பொன்னுசாமி, பின்னர் திமுகவில் இணைந்து கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். அதையடுத்து 2021 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்று, சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.
பொன்னுசாமி மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் அவரது மறைவுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.