
நாமக்கல் எம்.பி. வி.எஸ். மாதேஸ்வரன் இல்லத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக வெளியான செய்திக்கு, நாமக்கல் மாவட்டக் காவல்துறை மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலில், திமுக கூட்டணி சார்பில் நாமக்கல் தொகுதியில் போட்டியிட்டு, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் வி.எஸ். மாதேஸ்வரன் வெற்றி பெற்றார். மக்களவையில் கடந்த வாரம் நடைபெற்ற வக்ஃபு சட்ட திருத்த மசோதா மீதான வாக்கெடுப்பில் இவர் கலந்துகொள்ளாததை முன்வைத்து சர்ச்சை எழுந்தது.
இதைத் தொடர்ந்து, அது தொடர்பாக அவர் விளக்கமளித்தார். இந்நிலையில், மாதேஸ்வரன் இல்லத்தில் இன்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
இந்த விவகாரம் தொடர்பாக நாமக்கல் மாவட்டக் காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது,
`நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பொட்டணம் கிராமத்தில் நாமக்கல் மக்களவை உறுப்பினர் மாதேஸ்வரனுக்கு சொந்தமான இல்லத்தில் அவரது தாயார் வசித்து வருகின்றார்.
இன்று (ஏப்.10) அதிகாலை 01.30 மணியளவில் அவரது இல்லத்தில் உள்ள ஏசியில் மின்கசிவு ஏற்பட்டுத் தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று தீயை அணைத்தனர். இந்த விபத்தில் இல்லத்தில் இருந்த மின்விசிறி, சுவிட்ச் பாக்ஸ் மற்றும் ஏசி ஆகியவை சேதமடைந்துள்ளன. இதில் எந்தவொரு நபருக்கும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.
இந்த விபத்து தொடர்பாக புதிய தலைமுறை செய்தித் தொலைக்காட்சியில் இன்று மதியம் சுமார் 13.30 மணியளவில் மக்களவை உறுப்பினரின் இல்லத்தில் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாக செய்தி ஒளிபரப்பப்பட்டது.
மேற்கண்ட செய்தியானது பொய்யான புரளியாகும் என நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மேலும் இதுபோல் வதந்தி மற்றும் பொய்யான செய்திகளை வெளியிடுபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.