
குடியிருக்கும் பகுதிகளுக்கு அருகிலேயே பொதுமக்கள் இலவசமாக முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளும் வகையில், தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் `நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாம்கள் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலினால் இன்று (ஆக. 2) தொடங்கப்பட்டது.
சென்னை மயிலாப்பூரில் உள்ள செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி வளாகத்ததில், தமிழக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடைபெற்ற அரசு விழாவில், `நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை’ முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
நோய் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பு மக்கள் தங்களது உடலை மருத்து ரீதியாக பரிசோதிப்பதில்லை என்பதை நோக்கமாக வைத்து, இத்திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
நடப்பு ஆகஸ்ட் மாதம் முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை, மாவட்டம்தோறும் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் காலை 9 மணி முதல் 4 மணி வரை இந்த திட்டம் தொடர்பாக 1,256 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளன. மக்களின் குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகாமையில் இந்த மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். இதற்கான அறிவிப்பு, துண்டு பிரசுரங்கள் மூலமாக சம்மந்தப்பட்ட பகுதி மக்களுக்குத் தெரியப்படுத்தப்படும்.
பொது மருத்துவம், இதயவியல், நரம்பியல், புற்றுநோய் மருத்துவம், தோல் மருத்துவம், மகப்பேறியல் மற்றும் குழந்தைகள் மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம், இயன்முறை மருத்துவம், நுரையீரல் மருத்துவம் மற்றும் இந்திய முறை மருத்துவம் உள்ளிட்டவை தொடர்பான 17 சேவைகள் இந்த முகாம்களில் கட்டணமின்றி வழங்கப்படும்.
ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இதய நோய்கள், மனநல பாதிப்பு உள்ளவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள், மாற்றுத் திறனாளிகள், முதியோர் உள்ளிட்ட அனைவருமே இந்த முகாம்களில் கலந்துகொள்ளலாம்.
மேலும், இதே முகாமில் மாற்றுத்திறனாளிகள் பரிசோதிக்கப்பட்டு, எத்தனை சதவீதம் உடல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதற்கான சான்றிதழ்கள் வழங்கப்படும். அத்துடன் புதிய காப்பீடு திட்டத்தில் இணைவதற்கு விண்ணப்பிப்பதற்கான வசதிகளும் முகாமில் ஏற்படுத்தித்தரப்படும்.