பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ. 5,000 வழங்குக: அரசுக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல் | Nainar Nagenthran |

கடைசி நேரத்தில் கண்துடைப்புக்காக ஏனோதானோ எனக் கொள்முதல் செய்து ஏமாற்றும் திட்டமா...?
நயினார் நாகேந்திரன் (கோப்புப்படம்)
நயினார் நாகேந்திரன் (கோப்புப்படம்)ANI
1 min read

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ. 5,000 வழங்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

பொங்கல் பண்டிகையையொட்டி, 2.22 கோடி ரேஷன் அரிசி கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்புக்கான ரூ. 248 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு டிசம்பர் 31 அன்று அரசாணை வெளியிட்டது. அதன்படி, தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு ஆகியவற்றைக் கொள்முதல் செய்வதற்காக இந்தத் தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை தகவல் தெரிவித்தது. ஆனால் இதில் ரொக்கப்பணம் வழங்கப்படுவது குறித்த அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.

பொங்கல் பரிசுத் தொகுப்பில் என்ன இருக்கும்?

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு, ரூ. 3,000 ரொக்கப் பணத்துடன் 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவை வழங்க, அரசு முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. அதேசமயம், 'பொங்கல் பரிசாக, ரூ. 5,000 வழங்க வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருவதாகவும் தெரிகிறது. இதற்கிடையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பொங்கல் பரிசு என்ற பெயரில் திமுக அரசு போங்காட்டம் ஆடுகிறது என்று விமர்சித்துள்ளார்.

நயினார் நாகேந்திரன் விமர்சனம்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது:- “பொங்கல் பரிசுத் தொகுப்பில் போங்காட்டம் ஆடும் திமுக அரசு! இன்னும் 13 நாட்களில் பொங்கல் திருநாள் வரவிருக்கும் வேளையில், இப்போது தான் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு ரூ. 248 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது திமுக அரசு. பொங்கலுக்கு ரூ. 5,000 ரொக்கப் பணம் வழங்க வேண்டும் எனப் பொதுமக்களும், தொகுப்பில் மஞ்சள் கிழங்கு, வெல்லம் வழங்கிட கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகளும் எதிர்பார்த்து வரும் வேளையில், சொற்பத் தொகையை ஒதுக்கி, அவர்களின் நம்பிக்கையை உடைத்து, வழக்கம் போல ஏமாற்றத்தைப் பரிசளித்துள்ளது திமுக அரசு.

கொள்முதல் செய்யாதது ஏன்?

மேலும், வருடாவருடம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் நிலையில், இத்தனை நாட்கள் பரிசுத் தொகுப்புக்கான கரும்பையும் பச்சரிசியையும் சக்கரையையும் கொள்முதல் செய்யாதது ஏன்? ஒருவேளை, கடைசி நேரத்தில் கண்துடைப்புக்காக ஏனோதானோ எனக் கொள்முதல் செய்து, உழவர்களையும் பொதுமக்களையும் ஏமாற்றும் திட்டமா? ஆட்சி முடியும் தருவாயிலாவது திமுக அரசின் போங்காட்டத்தை ஒதுக்கி வைத்து, உடனடியாகக் கரும்பையும் மஞ்சளையும் வெல்லத்தையும் கொள்முதல் செய்து, ரூ. 5,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசை சரிவர வழங்குங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

Summary

BJP state president Nainar Nagendran has insisted that Rs. 5,000 should be given along with the Pongal gift package.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in