

ஒரு பொதுத்தேர்தலைக் கூடச் சந்திக்காத கட்சியுடன் கூட்டணி என்று பெரிய வார்த்தைகளைப் பேசலாமா என்று எடப்பாடி பழனிசாமியைக் குறிப்பிட்டு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
புதுக்கோட்டையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது திமுக, பாஜகவை தவிர வேறு எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்க தயாராக இருப்பதாக தவெக தலைவர் விஜய் கூறியிருக்கிறார். ஆனால் தவெகவுடன் கூட்டணிக்கு வாய்ப்பிருக்கிறது. கொடி பறக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். கூட்டணி ஏற்பட வாய்ப்பிருக்கிறதா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது:-
“எடப்பாடி பழனிசாமி அவரது கருத்தைத் தெரிவித்துள்ளார். ஆனால், நாங்கள் யாரையும் கூட்டணிக்கு அழைக்கவில்லை. அரசியலில் நிரந்தர நண்பரும் கிடையாது. நிரந்தர எதிரியும் கிடையாது. நிரந்தர பகைவரும் இல்லை.
ஆனால் அதே நேரத்தில், ஒரு பொதுத்தேர்தலைக் கூட சந்திக்காமல், ஒரு கவுன்சிலர் கூட இல்லாத கட்சியுடன் கூட்டணி அமைப்போம் என்பது போன்ற பெரிய வார்த்தைகளைப் பேசலாமா என்பதை அவர்தான் யோசித்துப் பார்க்க வேண்டும்.
அதிமுகவைப் பொறுத்தளவில் செங்கோட்டையன் நீக்கப்பட்டிருக்கிறார் என்பதுதானே தவிர கட்சிக்குள் பிளவு என்பது கிடையாது. எங்களை நம்பி வந்த ஓ. பன்னீர்செல்வன், டிடிவி தினகரன் ஆகியோரை நாங்கள் கைவிடவில்லை. அவர்களாகத்தான் வெளியே சென்றார்கள். மீண்டும் சேர்க்கப்படுவார்களா என்பதைக் காலம் தான் முடிவு செய்யும்.
பாஜக - அதிமுக இணைந்துள்ள எங்களது கூட்டணி வெற்றிபெறும். கன்னியாகுமரியில் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொள்ளவில்லை. கூட்டணி நிலைப்பாட்டைப் பொறுத்தவரை நம்மால் ஜோசியம் எதுவும் சொல்ல முடியாது. காலம்தான் பதில் சொல்லும்” என்றார்.
Nainar Nagendran has criticized Edappadi Palaniappan, saying, "Can one talk big about an alliance with a party that hasn't even faced a single general election?"