
அதிமுகவை ஒன்றிணைக்கும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் முயற்சிக்கு ஆதரவு அளிப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் இடையே நீண்ட காலமாகப் பனிப்போர் நிலவி வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எனக்கு 2 வாய்ப்புகள் கிடைத்தன. அதிமுக உடைந்துவிடக் கூடாது என்பதற்காக பல்வேறு தியாகங்களை செய்துள்ளேன். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமியைச் சசிகலா முதல்வர் வேட்பாளராக பரிந்துரைத்தார். ஆட்சி மாற்றத்திற்கு பிறகு அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் 10 நாட்களில் ஒருங்கிணைக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், ஒருங்கிணைப்பு பணிகளை நாங்களே மேற்கொள்வோம். வெளியே சென்றவர்களை அரவணைத்தால்தான் நம்மால் வெல்ல முடியும் என்பது எம்.ஜி.ஆர் சொல்லிக்கொடுத்த பாடம்” என்று கூறினார்.
இந்நிலையில் செங்கோட்டையன் முயற்சிக்கு ஆதரவு அளிப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது -
“அதிமுகவின் உட்கட்சி விவகாரத்திற்குள் தலையிட விரும்பவில்லை. ஆனால், அதிமுகவை ஒருங்கிணைக்கும் செங்கோட்டையனின் நல்ல முயற்சிக்கு ஆதரவு அளிக்கிறோம். தேவைப்பட்டால் நாங்கள் பேசவும் தயாராக உள்ளோம். அனைவரும் ஓரணியில் இணைவது நிச்சயம் நடக்கும். கடைசி ஒரு மாதத்தில் கூட நடக்கும். அரசியலில் எதுவும் நிரந்தரம் இல்லை. எல்லாரும் ஒற்றுமையாக இருந்தால் திமுக ஆட்சியை நிச்சயம்” என்று கூறினார்.
Nainar Nagendran | Sengottaiyan | ADMK | BJP | Edappadi Palaniswami | ADMK Clash | BJP Supports Sengottaiyan | ADMK Together | TN Politics |