
பாஜக கூட்டணியில் இருந்து டிடிவி விலகியதற்கு எந்த விதத்தில் நான் காரணம் என்பது தெரியவில்லை என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து டிடிவி தினகரின் அமமுக அண்மையில் வெளியானது. அதற்கு நயினார் நாகேந்திரனும் காரணம் என டிடிவி தினகரன் தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்து வருகிறார். மறுபுறம் நயினார் நாகேந்திரன் அதை மறுத்து வருகிறார். இந்நிலையில் நெல்லையில் இன்று (செப். 8) நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அதில் அவர் கூறியதாவது :
”எனக்கும் டிடிவி தினகரனுக்கும் இடையே தனிப்பட்ட விதத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை. கூட்டணியில் இருந்து வெளியேற நான்தான் காரணம் என்று டிடிவி தினகரன் எந்த அடிப்படையில் கூறுகிறார் என்று தெரியவில்லை. திடீரென என் மீது குற்றச்சாட்டை முன் வைக்கிறார் என்றும் தெரியவில்லை. அவருடன் நான் பலமுறை பேசியுள்ளபோதும் என்னிடம் எந்தக் கருத்தையும் அவர் சொல்லாமல் இப்படிப் பேசுவது மன வருத்தத்தை அளிக்கிறது.
தற்போதைய கூட்டணியை உருவாக்கியவர் அமித்ஷா. தமிழ்நாட்டில் வரும் சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர் வேட்பாளர் என அறிவித்தவர் அமித் ஷா. நான் மாநில தலைவர் மட்டுமே. தேசிய தலைமை எடுக்கும் முடிவை எங்களால் தடுக்க முடியாது. தேசிய ஜனநாயக கூட்டணியில் சிறிய கட்சி, பெரிய கட்சி என்ற பேதம் கிடையாது.
செங்கோட்டையன் கட்சிப் பொறுப்புகள் விலக்கப்பட்டது அதிமுகவின் உட்கட்சிப் விவகாரம். அதில் நான் கருத்து சொல்ல முடியாது. செங்கோட்டையன் ஹரித்வார் கோயிலுக்குத் தான் செல்கிறார். டெல்லியில் பாஜக தலைவர்களைச் சந்திக்கச் செல்லவில்லை. திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் அனைத்து எதிர் சக்திகளும் ஒன்றிணைய வேண்டும். அதன் அடிப்படையிலேயே தொண்டர்கள் செயல்பட வேண்டும்” இவ்வாறு பேசினார்.
Nainar Nagendran | TTV Dhinakaran | BJP | AMMK | TN Politics