
வானிலை மாற்றம் காரணமாக கடந்தாண்டு நிறுத்தப்பட்ட நாகை - இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று (பிப்.22) தொடங்கியது.
தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து இலங்கையின் ஜாஃப்னா மாவட்டத்தின் காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை கடந்த 2023-ம் ஆண்டில் தொடங்கிவைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.
தினமும் காலை 7 மணிக்கு நாகப்பட்டினத்தில் இருந்து கிளம்பி, காலை 11 மணிக்கு காங்கேசன்துறையைச் சென்றடையும் பயணியர் கப்பல், பின்னர் பிற்பகல் 1.30 மணிக்கு காங்கேசன்துறையில் இருந்து கிளம்பி மாலை 5.30 மணிக்கு நாகப்பட்டினத்தை வந்தடையும் வகையில், இந்த இருவழிக் கப்பல் போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்பட்டது.
ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் வானிலை மாற்றம் காரணமாக நவம்பர், டிசம்பர், ஜனவரி என 3 மாதங்கள் கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அந்த வகையில் கடந்தாண்டு நவம்பரில் நாகப்பட்டினம்-காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை முடிந்து வானிலை சீரடைந்த காரணத்தால், அரசு அனுமதி பெற்று கப்பல் போக்குவரத்து இன்று (பிப்.22) மீண்டும் தொடங்கியது.
நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கு 83 பயணிகள் கப்பலில் இன்று பயணப்பட்டுள்ளார்கள். பயணிகளை கவரும் வகையில், இலங்கைக்கு ஒரு வழிக் கட்டணமாக ரூ. 4,250 மற்றும் இருவழிக் கட்டணமாக ரூ. 8,500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு காலை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.