
பாஜக மூத்த தலைவரும் நாகாலாந்து ஆளுநருமான இல. கணேசன் (80) உடல்நலக் குறைவால் காலமானார்.
சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார்.
பாஜகவின் மூத்த தலைவரும் நாகாலாந்து ஆளுநருமான இல. கணேசன் அண்மையில் சென்னைக்கு வந்திருந்தார். கடந்த ஆகஸ்ட் 8 அன்று தியாகராய நகரிலுள்ள அவருடைய வீட்டில் தடுமாறி கீழே விழுந்ததாகத் தகவல்கள் வெளியாகின.
இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, அவர் சுயநினைவை இழந்ததாகச் செய்திகளில் தெரிவிக்கப்பட்டன. ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இல. கணேசன் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த ஒரு வாரமாக அங்கு சிகிச்சை பெற்று வந்த இல. கணேசன், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். மாலை 6.23 மணியளவில் அவருடைய உயிர் பிரிந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இல. கணேசன் 1945-ல் தஞ்சாவூரில் பிறந்தார். ஆர்எஸ்எஸ் கொள்கையால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தார். பாஜகவில் மூத்த தலைவராக அறியப்படும் இல. கணேசன் தேசியச் செயலாளர், தேசிய துணைத் தலைவர், மாநிலத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார்.
கடந்த 2021-ல் மணிப்பூர் ஆளுநராக இல. கணேசன் நியமிக்கப்பட்டார். 2023-ல் நாகாலாந்து ஆளுநராக நியமிக்கப்பட்டார். இடைப்பட்ட காலத்தில் கூடுதல் பொறுப்பாக மேற்கு வங்க ஆளுநராகவும் இல. கணேசன் நியமிக்கப்பட்டார்.
இல. கணேசன் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
La. Ganesan | Nagaland Governor | Nagaland Governor La. Ganesan