234 தொகுதிகளிலும் நாம் தமிழர் போட்டி: சீமான் அறிவிப்பு

117 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களைக் களமிறக்கப்போவதாக அறிவிப்பு
234 தொகுதிகளிலும் நாம் தமிழர் போட்டி: சீமான் அறிவிப்பு
படம்: https://www.youtube.com/@NaamThamizharKatchi
1 min read

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் என நான்கு முனைப் போட்டி நிலவியது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடுவதால், ஐந்து முனைப் போட்டி நிலவ வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால், அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துப் போட்டியிட முடிவு செய்துவிட்டன. சீமானின் நாம் தமிழர் விஜயின் தவெகவுடன் கூட்டணி அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு இருந்துகொண்டே இருந்தது. அதிமுக - பாஜக கூட்டணியில் நாம் தமிழர் இணையுமா என்ற கேள்வியும் நிலவி வந்தது.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் மாபெரும் தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டம் கோவையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய சீமான் 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தார்.

"நான்கு முறை பொதுத்தேர்தலில் தோற்று, பலமுறை இடைத்தேர்தல்களில் தோற்று, இரு முறை ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தோற்ற ஒரு கட்சி ஐந்தாவது முறையும் களத்தில் தனித்து நிற்கப்போகிறது என்றால், இந்திய அரசியல் வரலாற்றிலேயே அது நாம் தமிழர் கட்சி தான்.

இம்முறையும் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி. 117 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களும் மீதமுள்ள 117 தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களும் களமிறக்கப்படுகிறார்கள். இதில் 134 தொகுதிகள் வெறும் இளைஞர்களுக்கு என்பதைத் தம்பி, தங்கைகள் புரிந்துகொள்ள வேண்டும்" என்றார் சீமான்.

இதன்மூலம், 2026 சட்டப்பேரவைத் தேர்தல் களம் திமுக கூட்டணி, அதிமுக - பாஜக கூட்டணி, நாம் தமிழர் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் என மீண்டும் நான்கு முனைப் போட்டியாக மாறியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in