எனக்கும் ஜெயக்குமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு கிடையாது: ரூபி மனோகரன் விளக்கம்

"உண்மை என்னவென்பதை காவல் துறை நிச்சயமாகக் கண்டுபிடிக்கும். காவல் துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பைக் கொடுப்பேன்."
எனக்கும் ஜெயக்குமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு கிடையாது: ரூபி மனோகரன் விளக்கம்
படம்: https://twitter.com/ruby_manoharan

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாருக்கும், தனக்கும் இடையே எந்தப் பிரச்னையும் இல்லை, தன்மீதான குற்றச்சாட்டுகள் எதிலும் உண்மையில்லை என எம்எல்ஏ ரூபி மனோகரன் தெரிவித்துள்ளார்.

திசையன்விளை அருகே கரைசுத்து புதூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவரான ஜெயக்குமார் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தார். இவர் கடந்த 2-ம் தேதி முதல் காணவில்லை என இவரது மகன் நேற்று காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதுதொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், ஜெயக்குமாரின் உடலானது அவரது தோட்டத்தில் பகுதி எரிந்த நிலையில் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது கொலையா, தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடத்த மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஜெயக்குமார் ஏற்கெனவே தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, திருநெல்வேலி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் கடந்த மாதம் 30-ம் தேதி புகார் மனுவை அளித்திருந்தார். இதில் நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு உள்ளிட்டோரது பெயர்களைக் குறிப்பிட்டிருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், தனக்கும் ஜெயக்குமாருக்கும் இடையே எந்த வரவு, செலவும் இல்லை, தங்களுக்கிடையே எந்தக் கருத்து வேறுபாடும் கிடையாது என்று ரூபி மனோகரன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

"இடைத்தேர்தலில் போட்டியிட்டபோது, எனக்கு உறுதுணையாக இருந்து பயணம் செய்தவர். 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் எங்களுடைய கூட்டணிக்காக, கட்சிக்காக உழைத்தவர். மிக நெருங்கிய நண்பர். நாடாளுமன்றத் தேர்தலில்கூட ஒன்றாகப் பயணித்தோம், ஒன்றாகப் பாடுபட்டோம். இவருடைய இழப்பு மிகப் பெரிய இழப்பு. இவருடைய மறைவு தனிப்பட்ட முறையில் அல்லாமல், கட்சிக்கும் இழப்பு" என்றார்.

நீங்கள் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாகப் புகாரில் உங்களுடையப் பெயரை அவர் குறிப்பிட்டுள்ளார் என்ற கேள்விக்குப் பதிலளித்து அவர் கூறியதாவது:

"இதில் உண்மை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. பணம் வாங்கியதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கும்போது, என் மீது வேண்டுமென்றே பழி போட வேண்டும் என்று யாரோ பின்புலமாக இருந்து வேலை செய்வதாகத் தோன்றுகிறது.

உண்மை என்னவென்பதை காவல் துறை நிச்சயமாகக் கண்டுபிடிக்கும். காவல் துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பைக் கொடுப்பேன். இதில் எதுவுமே கிடையாது. நாங்கள் நெருங்கிய நண்பர்கள். எங்களுக்கிடையே எந்தக் கருத்து வேறுபாடும் கிடையாது. அண்ணன், தம்பி போல இருந்து வருகிறோம். நான் பணம் வாங்கியதாக சொல்வதெல்லாம் உண்மைக்குப் புறம்பானது.

எனக்கும், ஜெயக்குமாருக்கும் இடையே எந்த வரவு செலவும் கிடையாது. இது பொய்யான தகவல். காவல் துறை இதுகுறித்து விசாரிக்கும்" என்றார் ரூபி மனோகரன்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in