தன் மகன்கள் இருவரும் இருமொழிக் கொள்கையில்தான் படித்தார்கள் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்துள்ளார்.
மதுரையில் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மும்மொழிக் கொள்கை குறித்து பேசுகையில், "எங்கேயும் வெற்றி பெறாமல் முழுமையாகத் தோல்வியடைந்த ஒரு திட்டத்தைக் கொண்டு வந்து, வெற்றியடைந்த திட்டத்துக்கு மாற்றாக தோல்வியடைந்த திட்டத்தைச் செயல்படுத்துமாறு கூறினால், அறிவு இருப்பவர்கள் யாராவது இதை ஏற்றுக்கொள்வார்களா?" என்று கேள்வியெழுப்பியிருந்தார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை இதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசினார்.
"பிடிஆரின் மகன் எங்கு படிக்கிறார்? பிடிஆரின் மகன் மூன்று மொழிகளைச் சொல்லிக் கொடுக்கும் பள்ளியில் படிக்கிறார் என்றால், உங்களுக்கு அறிவு இல்லை என்று தானே அர்த்தம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லா அமைச்சர்களின் குழந்தைகள், பேரக் குழந்தைகள் எல்லோரும் மூன்று மொழிகளில் தான் படிக்கிறார்கள்" என்றார் அண்ணாமலை.
இந்நிலையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மதுரையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசுகையில் அண்ணாமலையின் கேள்விக்குப் பதிலளித்தார்.
"வாதங்களை எதிர்கொள்ள முடியாதவர்கள் அமைச்சர்கள் மகன்கள் எங்கு படிக்கிறார்கள் என்று முதல் புரளியைக் கிளப்புவார்கள். 34 பேருடைய மகன், மகள்கள் எங்கே படிக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. 8 கோடி மக்களுக்கு என்ன கல்வித் திட்டம் என்பதுதான் முக்கியம். எந்த வாதத்திலும் தனிநபருக்காக திசை திருப்பும்போது, இது மிகவும் தோல்வியடையக் கூடிய வாதத்தை தான் திசை திருப்புகிறார்கள் என்பதை நாம் எண்ண வேண்டும்.
இருந்தாலும், நான் ஓர் உண்மையை இங்கு சொல்ல விரும்புகிறேன். ஏதோ ஒரு கட்சித் தலைவர் இன்று ஏதோ ஒரு பேட்டியில், அமைச்சர் பிடிஆரின் மகன்கள் எத்தனை மொழியில் படித்தார்கள் என்று சொல்லட்டும்? என்று சொல்லியிருக்கிறார்... நான் தெளிவாக விளக்கம் சொல்கிறேன். எனக்கு இருப்பது இரண்டு புதல்வர்கள்தான். இருவருக்கும் என் அப்பா பெயர்களைப் பிரித்து வைத்துள்ளேன். ஒருவருடையப் பெயர் பழனி, ஒருவருடையப் பெயர் வேல். என் இரு மகன்களும் எல்கேஜி முதல் பள்ளிப் படிப்பை முடிக்கும் வரை, இரட்டை மொழிக் கொள்கையில்தான் படித்தார்கள். யாருக்கெல்லாம் விளக்கம் தேவையோ எடுத்துக்கொள்ளட்டும்" என்றார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.