பரந்தூர் மண்ணிலிருந்து என்னுடைய கள அரசியல் பயணம் தொடக்கம்: விஜய் பேச்சு

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான நிலைபாட்டை பரந்தூர் விமான நிலைய திட்டத்திலும் அரசு எடுத்திருக்கவேண்டும்.
பரந்தூரில் விஜய்
பரந்தூரில் விஜய்
2 min read

பரந்தூர் மண்ணிலிருந்து தன் கள அரசியல் பயணத்தைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார் தவெக தலைவர் விஜய்.

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை எதிர்த்துப் போராடும் ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பரந்தூர் பகுதிக்கு இன்று நண்பகல் 12.30 மணி அளவில் வருகை தந்தார் தவெக தலைவர் விஜய். அங்குள்ள வீனஸ் திருமண மண்டபத்தில் வைத்து கிராம மக்களை விஜய் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மக்களை சந்திக்கும் முன்பு, வீனஸ் திருமண மண்டப வளாகத்திற்குள் வேனில் நின்றபடி, விஜய் பேசியதாவது:

`அனைவருக்கும் வணக்கம். கிட்டத்தட்ட 910 நாட்களுக்கும் மேலாக உங்களின் மண்ணுக்காகப் போராடி வருகிறீர்கள். உங்க போராட்டத்தைப் பற்றி ராகுல் என்கிற சின்னப்பையன் பேசியதை நான் கேட்டேன். அந்தக் குழந்தையின் பேச்சு என்னைப் பாதித்தது.

உடனடியாக உங்களைப் பார்த்துப் பேசவேண்டும் எனத் தோன்றியது. உங்களுடன் நான் தொடர்ந்து நிற்பேன் எனக் கூறவேண்டும் என்று தோன்றியது. உங்களை மாதிரி விவசாயிகள் நம் நாட்டிற்கு மிகவும் முக்கியம். அதனால் உங்களின் காலடி மண்ணைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு என் பயணத்தைத் தொடங்கவேண்டும் என்கிற முடிவுடன் இருந்தேன்.

அதற்கு சரியான இடம் இதுதான் எனத் தோன்றியது. என் கள அரசியல் பயணம் உங்களின் ஆசிர்வாதத்துடன் இங்கிருந்து தொடங்குகிறது. நம் முதல் மாநில மாநாட்டில் நான் எடுத்துக்கூறிய கொள்கைகளில் ஒன்று இயற்கை வளப் பாதுகாப்பு. இதை நான் ஓட்டு அரசியலுக்காக இங்கே கூறவில்லை.

அதே மாநில மாநாட்டில் விவசாய நிலங்கள் பாதுகாப்புக் கொள்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 13 நீர் நிலைகளை அழித்து சென்னையை நிரந்தமாக வெள்ளக்காடாக மாற்றும் இத்திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிடவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அது மட்டுமல்லாமல் இந்த மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் சட்டப்போராட்டம் நடத்தவும் தயங்கப்போவதில்லை எனக் கூறியிருந்தோம். நான் வளர்ச்சிக்கு எதிராக இல்லை. விமான நிலையம் வரக்கூடாது என்று நான் கூறவில்லை. இந்த இடத்தில் வரக்கூடாது என்றுதான் கூறுகிறேன்.

இதை நான் சொல்லவில்லை என்றால், இவன் வளர்ச்சிக்கு எதிரானவன் என்று கூறுவார்கள். அனைத்துக்கும் மேல், புவி வெப்பமயமாதல் இந்தப் பூமியில் வசிக்கும் அனைத்து உயிரினங்களையும் அச்சுறுத்தி வருகிறது.

ஒவ்வொரு வருடமும் மழைக்காலத்தில் வெள்ளத்தில் சென்னை தத்தளித்ததை நாம் பார்த்தோம். சென்னையில் இவ்வாறு வெள்ளம் ஏற்படக் காரணம், இதைப் போன்ற சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள சதுப்பு நிலங்கள், நீர்நிலைகளை அழித்ததே என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அறிவியல் ஆய்வு கூறுகிறது.

90 சதவீத விவசாய நிலத்தை, நீர் நிலையை அழித்து இந்த திட்டத்தை செயல்படுத்தும் அரசு, மக்கள் விரோத அரசாகவே இருக்க முடியும். அரிட்டாப்பட்டியில் அமையவிருந்த டங்ஸ்டன் சுரங்கத்தை எதிர்த்து, தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது. அதை நான் வரவேற்கிறேன். ஆனால், அதே நிலைபாட்டைத் தானே பரந்தூரிலும் எடுத்திருக்கவேண்டும்?

அரிட்டாப்பட்டி மக்களைப் போல, பரந்தூர் மக்களும் நம் மக்கள் என்பதை அரசு யோசித்திருக்கவேண்டும். ஆனால் யோசிக்கவில்லை. ஏனென்றால் விமான நிலையத்தைத் தாண்டி இந்தத் திட்டத்தில் அவர்களுக்கு ஏதோ லாபம் இருக்கிறது. அதை நம் மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது எட்டு வழிச்சாலை திட்டத்தையும், காட்டுப்பள்ளி துறைமுகத்தையும் எதிர்த்தீர்கள். அதே போன்ற ஒரு நிலைப்பாட்டைத் தானே இங்கு எடுக்கவேண்டும். எதிர்க்கட்சியாக இருந்தபோது விவசாயிகளுக்கு ஆதரவு, ஆளுங்கட்சியாக இருக்கும்போது விவசாயத்திற்கு எதிர்ப்பா? ஏன் இப்படி என்று எனக்குப் புரியவில்லை.

உங்களின் நாடகங்களைப் பார்த்துக்கொண்டு மக்கள் அமைதியாக இருக்கப்போவதில்லை. உங்கள் வசதிக்காக அவர்களுடன் நிற்பதும், நிற்காமல் இருப்பதும், நாடகம் நடத்துவதும், நாடகம் நடத்தாமல் இருப்பதும் மக்களுக்குத் தெரியும்.

இனிமேலும் உங்கள் நாடகத்தைப் பார்த்துக்கொண்டு மக்கள் அமைதியாக இருக்கமாட்டார்கள். பரந்தூர் விமான நிலையத்திற்கான இடத்தை மறு ஆய்வு செய்யவேண்டும் என மத்திய, மாநில அரசுகளிடம் கேட்டுக்கொள்கிறேன். பாதிப்புகள் குறைவாக இருக்கும் இடத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்துங்கள்.

வளர்ச்சி மக்களுக்கு முன்னேற்றத்தை அளிக்கும், ஆனால் வளர்ச்சி என்ற பெயரில் நடக்கும் அழிவு மக்களை அதிகமாகப் பாதிக்கும். உங்களின் கிராம தெய்வங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை இழந்துவிடவேண்டாம். உங்களுக்காகவும், உங்கள் ஊருக்காகவும், உங்க வீட்டுப் பிள்ளையான நானும், தவெக தோழர்களும் சட்டத்துக்குட்பட்டு அனைத்து வழிகளிலும் உறுதியாக நிற்போம்.

ஏகனாபுரம் திடலில் உங்களை சந்திக்க எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. ஊருக்குள் வர எனக்கு ஏன் தடை விதிக்கப்பட்டது எனத் தெரியவில்லை. இப்படித்தான் சில நாட்களுக்கு முன்பு நம் பிள்ளைகள் துண்டு சீட்டு விநியோகித்ததற்குத் தடை விதித்தனர். நம்பிக்கையுடன் இருங்கள், நமக்கு வெற்றி நிச்சயம்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in