
`இந்தி திணிப்பைக் கைவிடவேண்டும், இரு மொழிக்கொள்கை தொடரவேண்டும் என்பதே என் பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி’ என்று கருத்து தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
இன்று (மார்ச் 1) 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின். இதை ஒட்டி சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசுப் பள்ளியில் 2025-26 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையைத் தொடங்கிவைத்தார் முதல்வர் ஸ்டாலின்.
இதைத் தொடர்ந்து, மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார் ஸ்டாலின். அப்போது, `அண்ணா வழியில் அயராது உழைப்போம். இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்’ என்று அவர் கோஷமிட, அதை வழிமொழிந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கோஷம் எழுப்பினார்கள்.
அதன்பிறகு, வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில், தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் ஸ்டாலின். இதையடுத்து, கோபாலபுரம் இல்லத்தில், தன் தாயார் தயாளு அம்மாவை சந்தித்து அவர் ஆசி பெற்றார். அதைத் தொடர்ந்து, நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது,
`நேற்றைய தினம் நடைபெற்ற என் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் இண்டியா கூட்டணித் தலைவர்கள் முன்னிலையில், நான் வலியுறுத்தியிருந்தேன். மாநிலத்தில் சுயாட்சி வேண்டும், இந்தி திணிப்பைக் கைவிடவேண்டும், இரு மொழிக் கொள்கை தொடர வேண்டும். அதுவே என் பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி’ என்றார்.
இதையடுத்து திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கட்சித் தொண்டர்களை சந்தித்தார் ஸ்டாலின்.
`தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக அவர் வாழ வேண்டும்’ என்று பிரதமர் நரேந்திர மோடி தன் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.
முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தமிழில் கையெழுத்திட்டு தமிழிலேயே வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியதாவது, `தாங்கள் இன்று தங்களுடைய 72-வது பிறந்தநாளை கொண்டாடுவதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தங்களுடைய தலைமையின் கீழ் தமிழ்நாட்டு மக்கள் எல்லா நலன்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன். எல்லாம் வல்ல இறைவன் அருளால் தாங்கள் பூரண உடல் ஆரோக்கியத்துடனும், சந்தோஷத்துடனும் தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை ஆற்றிடவும் இந்த நாளில் தங்களை வாழ்த்துகிறேன்’ என்றார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய இணையமைச்சர் எல். முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தவெக தலைவர் விஜய் ஆகியோரும் முதல்வருக்குத் தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.